

டிசம்பர் மாதத்துக்குள் 136 கோடி கரோனா தடுப்பூசி டோஸ் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் உற்பத்தி குறித்து எம்.பி.க்களுக்கு பிரதமர் அலுவலகம் சார்பில் விளக்கக் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் நாட்டில் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிகள் தேவையான அளவுக்கு மக்களுக்கு கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி உற்பத்தியை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்தில் கோவாக்சின் 2.65 கோடி, கோவிஷீல்டு 23 கோடி என மொத்தம் 25.65 கோடி டோஸ்களாக இருக்கும்.
செப்டம்பரில் கோவாக்சின் 3.15 கோடி, கோவிஷீல்டு 23 கோடிஎன மொத்த உற்பத்தி 26.15 கோடி டோஸ்களாகவும் அக்டோபரில் கோவாக்சின் 5.25 கோடி, கோவிஷீல்டு 23 கோடி என மொத்த உற்பத்தி 28.25 கோடி டோஸ்களாகவும் இருக்கும்.
அக்டோபரை போலவே நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் உற்பத்தி அதே அளவில் அதாவது மொத்த உற்பத்தி தலா 28.25 கோடி டோஸ்களாக இருக்கும். இதன்படி, டிசம்பருக்குள் இந்தியாவில் 136 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டுவிடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று அதிகரிப்பு
மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் புதிதாக 44,643 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளது. இது கடந்த 29 நாட்களில் மிக அதிகபட்சமாகும்.
ஒரே நாளில் 41,096 பேர்குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 3.10 கோடி பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 4.14 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 464 பேர் உயிரிழந்துள்ளனர். நாடுமுழுவதும் கரோனாவால் இதுவரை 4.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் நேற்று முன்தினம் 22,040 பேருக்கும், நேற்று 19,948பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில்16 நாட்களுக்கு பிறகு தினசரி தொற்று 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஆந்திரா, தமிழகம், கர்நாடகாவில் தலா 2 ஆயிரம் பேருக்கும், ஒடிசா, அசாமில் தலா ஆயிரம் பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
கரோனா 3-வது அலை அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் நேற்றிரவுவெளியிட்ட பதிவில், ‘நாடு முழுவதும் இதுவரை 50 கோடி கரோனா தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.