

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டிக்களைத் தவிர இதர பிறபடுத்தப்பட்டோரையும் உள்ளடக்கிய சாதி வாரியான மக்கள்தொகையையும் பட்டியலிடத் தயாராக இருந்தால் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், அவைக்கு வெளியேயும் ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டிக்களைத் தவிர மற்ற சாதி வாரியான மக்கள்தொகையை பட்டியலிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் தான் மாயாவதி மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டிக்களைத் தவிர மற்ற பிறபடுத்தப்பட்டோரையும் உள்ளடக்கிய சாதி வாரியான மக்கள்தொகையையும் பட்டியலிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக நேற்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், இதே விவகாரத்தை ஒட்டி பிரதமர் மோடியை நேரில் சந்திக்க அனுமதி கோரினார். மத்திய அரசு முன்மொழிந்துள்ள எஸ்சி மற்றும் எஸ்டிக்களை மட்டுமே உள்ளடக்கிய கணக்கெடுப்பு சூட்சமமானது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் கோரிக்கை..
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழகத்திலும் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்காக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் காரணங்கள் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதப்படுகிறது. இதனால், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைத்து, உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.