

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்க சென்னை யிலிருந்து ரயில் மூலம் சுமார் 800 விவசாயிகள் நேற்று டெல்லி வந்தனர். நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்று பிறகு, குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அதன் தலைவர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் இவர்கள் வந்திருந்தனர். இவர்கள் அனைவரையும் டெல்லி ரயில் நிலையத்திலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அனைவரையும் பேருந்துகளில் ஏற்றிய டெல்லி போலீஸார் விவசாயிகளின் போராட்ட களமான சிங்கூருக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகப் பட்டினம் மாவட்டக் குழு உறுப்பினர் மா.முத்துராமலிங்கம் கூறும்போது, “பொதுத்துறை நிறுவனங்களைப் போல், விவசாயி களையும் புதிய சட்டங்கள் மூலம் தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனால் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அரசு கொள்முதல் முதல் ரேஷன் அரிசி விநியோகம் வரை விவசாயிகளுக்கு கிடைத்து வரும் பலன்கள், இச்சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டு விடும். எனவே ஆகஸ்ட் 11 வரை டெல்லியில் போராட உள்ளோம்” என்றார்.
தமிழகத்திலிருந்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும் டெல்லி வந்துள்ளனர். ரயில் நிலையத்தில் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டபோது ஜந்தர் மந்தருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அங்கு ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனைத்து மாநில விவசாயிகளும் போட்டி நாடாளுமன்றக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழக விவசாயிகள் அங்கு செல்ல போலீஸார் அனுமதி மறுத்தனர்.
முன்னதாக, ‘ஆஷா’ என்று அழைக்கப்படும் நீடித்து நிலைத்த வேளாண்மைக்கானக் கூட்டமைப்பின் தமிழக பிரிவி லிருந்து 5 நிர்வாகிகள் டெல்லி வந்தனர். இவர்கள், ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றனர். அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவினரும் தமிழகத்திலிருந்து வந்து டெல்லி போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.