

இந்திய இளைஞர்களின் குரலைஒடுக்கும் ஆயுதமே பெகாசஸ் உளவு மென்பொருள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உள்ள மென்பொருள் மூலம் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரது செல்போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது:
சகோதர, சகோதரிகளே ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போன் தான் உங்கள் குரல். நீங்கள் விரும்பிய கருத்தை உங்கள் மொபைல் போன் மூலம் நீங்கள் வெளிப்படுத்தலாம். பெகாசஸ் உளவு மென்பொருளை உங்கள் மொபைல் போன்களில் பிரதமர் நரேந்திர மோடி புகுத்தியுள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனது மொபைல் போனில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து இளைஞர்களின் மொபைல் போன்களிலும் பெகாசஸ் உளவு மென்பொருள் வைக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களின் குரலைஒடுக்கும் ஒரு கருவியே பெகாசஸ் உளவு மென்பொருள்.
நாட்டின் இளைஞர்கள் உண்மையை பேசினால் அவர்களின் மொபைல் போன்கள் மூலம் அவர்களை பிரதர் மோடி கண்காணிக்கிறார். பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரைஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை” என்றார்.