

‘ஸ்மார்ட் சிட்டி’ உருவாக்கம் தொடர்பான அசோசெம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேருக்குதான் ரூ.10 லட்சத்துக்கு மேல் வீடு வாங்க கூடிய திறன் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம் ரூ.5 லட்சத்துக்குள் மக்களுக்கு வீடு வழங்கவும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
ரூ.5 லட்சத்துக்குள் வீடு கிடைக்கச் செய்தால், நாட்டின் மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் அதை வாங்கும் நிலை உருவாகும். மிகவும் ஏழைகளாக உள்ளவர்கள் பயன்பெறும் வகை யில் குறைந்த விலையில் வீடுகள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக நாக்பூரில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வரும் 20-ம் தேதி தொடங்கி வைக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் ஒரு சதுர அடிக்கு ரூ.1000 செலவாகிறது. எனவே, ரூ.5 லட்சத்துக்கு 450 சதுர அடி வீடுகள் வழங் கப்படும். மேலும், இந்த வீடுகளில் சூரிய சக்தி பொருத்தப்படும். படுக்கை உட்பட மரச் சாமான்களும் வழங்கப்படும். இதற்கு ரூ.1.5 லட்சம் மானியமும் வழங்கப்படும். எனவே, ஒரு வீட்டின் விலை ரூ.3.5 லட்சம்தான் ஆகும். இந்த வீடுகளை வாங்க 7 முதல் 7.5 சதவீத குறைந்த வட்டியில் வங்கிக் கடனும் கிடைக்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.