

மகாராஷ்டிர மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜகன் புஜ்பல், அவரது மகனும் எம்எல்ஏவுமான பங்கஜ் புஜ்பல் மற்றும் உறவினர்கள் இணைந்து போலியான பெயரில் நிறுவனங்களை நடத்தி அதன் மூலம் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கடந்த நாடாளு மன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, ‘‘புஜ்பல் குடும்பத்தினரும், உறவினர்களும் போலியான நிறுவனங்களை நடத்தி வந்ததும், இதற்கான பண பரிவர்த்தனைகள் வெற்று தாள்களில் மட்டுமே இடம் பெற்றிருந்ததையும் அமலாக்கத் துறை கண்டறிந்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜகன் புஜ்பலின் மகன் பங்கஜ் புஜ்பலின் பாஸ் போர்ட்டை அமலாக்கத் துறையினர் நேற்று முடக்கியுள்ளனர். அத்துடன் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தர விட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி, விசாரணையில் நடந்துள்ள முன் னேற்றங்களை நான்கு வாரங் களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்தே பங்கஜ் புஜ்பல் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப் படுகிறது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பங்கஜ் புஜ்பல், அவரது உறவினர்களின் ரூ.280 கோடி மதிப்புள்ள சொத்து களையும் அமலாக்கத் துறை முடக்கிவைத்துள்ளது.