

ஆவடி, திருச்சியில் உள்ள இந்திய படைக்கலன் ஆலைகள் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றப்பட்டால், தேசப் பாதுகாப்புடன் லட்சக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகாதா என, நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, டி.ஆர்.பாலு அலுவலகம் இன்று (ஆக. 05) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று (ஆக. 04) மக்களவையில், 'மத்திய அரசுக்குச் சொந்தமான படைக்கலன் நிறுவனங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்ற எடுத்துள்ள முடிவினால் தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாதா? அவற்றின் லட்சக்கணக்கான அலுவலர்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கான அந்தஸ்தையும் உரிமைகளையும் இழக்கும் நிலை ஏற்படாதா?' என, மத்திய பாதுகாப்புத் துறை இணைமைச்சர் அஜய் பட்-டிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அளித்த விரிவான விளக்கம்:
'தமிழகத்தில் உள்ள ஆவடி மற்றும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, கனரக கலப்பு உலோக ஊடுருவி ஆலை உள்ளிட்ட படைக்கலன் ஆலைகள் வாரியத்தின் உற்பத்தி ஆலைகளும், ஏனைய நிறுவனங்களும், புதிய ஏழு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களாக, கார்ப்பரேட் அமைப்புகளாக, மாற்றம் செய்திட மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
இந்தியப் படைக்கலன் ஆலைகளுக்கு அதிக இயக்கம் சார் அதிகாரம் அளித்தல், செயல் திறன் அதிகரிப்பு, வளர்ச்சிக்கான வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தளைகளை அகற்றல் போன்ற நோக்கங்களைக் கருத்தில் கொண்டுதான் நேரடி அரசுத் தொழில் நிறுவனங்கள் அந்தஸ்த்தில் உள்ள இந்த படைக்கலன் ஆலைகளை கார்ப்பரேட் அமைப்பாக மாற்றிட அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்த மாற்றத்தால் நாட்டின் பாதுகாப்பு எவ்வகையிலும் பாதிப்புக்குள்ளாகாது. ராணுவம், உள்துறை மற்றும் அரசு ஏற்கெனவே அளித்துள்ள பல்வேறு கருவிகள் பொருள்களுக்கான கொள்முதல் ஆணைகள் கார்ப்பரேட்மயம் ஆனபிறகும் தொடர்ந்து இருக்கும் உறுதியையும் மத்திய அரசு அளித்துள்ளது.
'ஏ', 'பி' மற்றும் 'சி' தொகுப்பு அலுவலர்கள் அனைவரும் புதிய கார்ப்பரேட் நிறுவனங்களில் அயல்பணி அடிப்படையில், தொடர்ந்து அரசு அலுவலர்களாகவே இருப்பர். அவர்களின் சம்பளம், ஓய்வூதியம், மருத்துவ உதவி உள்ளிட்ட பணிப்பலன்கள் அனைத்தும் மாற்றம் ஏதும் இல்லாமல் தொடரும். தற்போது பணியில் உள்ள அலுவலர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் இந்திய அரசிடம் இருந்தே ஓய்வூதியம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
படைக்கலன் ஆலைகள் வாரியத்தின் தலைமை அலுவலகம், புதுடெல்லியில் உள்ள வாரியத்தின் அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், படைக்கலன் நிறுவனங்களில் உள்ள மருத்துவமனைகள், கல்வி நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் புதிதாக அமைக்கப்படவுள்ள படைக்கலன் நிறுவனங்கள் இயக்குநரகத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவர்'.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கார்ப்பரேட்மயம் ஆன பிறகு படைக்கலன் வாரியத்தின் 'டி' தொகுதி பணியாளர்கள் நிலை என்ன? என்பது குறித்து, அமைச்சர் தனது பதிலில் எதுவும் கூறவில்லை என்பது கடும் ஏமாற்றம் அளிக்கிறது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.