

ரயில்களில் பயணிகளுக்கு வை-பை வசதி வழங்கும் திட்டம் செலவு மிக்கதாக இருப்பதால் அதனை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
‘வை-பை தொழில்நுட்பம் அலைவரிசை கட்டண அடிப்படையில் பெற வேண்டியதுள்ளது. தொடர்ச்சியான செலவுகள் ஏற்படுகிறது. திட்டத்தை அமல்படுத்தும் செலவும் குறைந்ததாக இல்லை. அத்துடன் இந்த வசதி மூலம் பயணிகளுக்கு போதிய அலைவரிசை கிடைப்பசிலும் சிக்கல் நீடிக்கிறது. எனவே இந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது’
புறநகர் மற்றும் பயணிகள் ரயில்கள் உட்பட அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 4141 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் மட்டும் 335 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அனைத்து ரயில் நிலையங்களிலும் காணொலி கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கான பணிகளுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிர்பயா நிதியின் கீழ் 983 நிலையங்களில் ஒருங்கிணைந்த விசாரணை எதிர்வினை மேலாண்மை அமைப்பை நிறுவுதல் இதில் அடங்கும்.
814 நிலையங்களில் இது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பணியை துரிதப்படுத்துவதற்காக சில மண்டல ரயில்வேக்கள், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கிடையே பணிகள் பகிரப்பட்டுள்ளன.
ரயில்வே வசதிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை விலை ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு முறை நீட்டிப்பு, ரயில்களில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு தானியங்கி முறையில் கீழ் படுக்கையை ஒதுக்கீடு செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதி, ஐஆர்சிடிசியின் ஆன்லைன் தளமான irctc.co.in மூலம் சக்கர நாற்காலி முன்பதிவு வசதி, முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்டவை சில முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.