Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM

முதல் முறையாக முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரான விமானம் தாங்கி கப்பல் சோதனை ஓட்டம்

கேரள மாநிலம் கொச்சியில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. இதற்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட உள்ளது. படம்: பிடிஐ

புதுடெல்லி

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான முதல் விமானம் தாங்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது.

முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விமானம் தாங்கி கப்பலை தயாரிக்க மத்தியஅரசு கடந்த 2003-ம் ஆண்டு அனுமதிவழங்கியது. ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான இதன் கட்டுமானப் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது. 40 ஆயிரம் டன் எடை கொண்ட இந்தக் கப்பல் கட்டும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இந்நிலையில், இந்தக் கப்பலின் கடல் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

இது பெருமைக்குரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தினம் என கடற்படை தெரிவித்துள்ளது. இதன்மூலம் விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கும் திறன் கொண்ட சில நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்தக் கப்பலில் இருந்து, மிக்-29கே சூப்பர்சானிக் போர் விமானங்கள், எம்எச்-60ஆர் பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை (ஏஎல்எச்) இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது. இவை எல்லாம் முடிய இன்னும் ஓராண்டு ஆகும் எனத் தெரிகிறது. எனவே, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த கப்பல் கடற்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் பிரிட்டனிடமிருந்து 1961-ல் வாங்கப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் 1971-ம் ஆண்டு நடந்த போரில் முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இந்தக் கப்பல் 1997-ல் கடற்படையிலிருந்து விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டிலேயே வடிமைக் கப்பட்டுள்ள கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படையிடம் ஏற்கெனவே ஒரு விமானம் தாங்கி கப்பல் உள்ளது. ரஷ்யா விடமிருந்து வாங்கப்பட்டு, 2013-ல் கடற்படையில் சேர்க்கப்பட்ட இந்தக் கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x