

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியத்தில் கடந்த மே 4-ம் தேதி நள்ளிரவு நடந்த மோதலின்போது ஜூனியர் மல்யுத்த சாம்பியனான சாகர் தன்கர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற சுஷில் குமார் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் குற்றத்தின் பின்னணியை விவரித்து 1,000 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று டெல்லி தலைமை பெருநகர நீதிமன்றத்தில் குற்றப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். இதில் சுஷில் குமார் உள்ளிட்ட 13 பேர் இடம் பெற்றிருந்தனர்.
காவல்துறையினர் கூறும்போது, சுஷில் குமாரின் மனைவிக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டில் சாகர் தன்கர் வாடகைக்கு இருந்துள்ளார். இங்கு மல்யுத்தத்துடன் தொடர்பில்லாத பலர் வந்து சென்றுள்ளனர். இதை சுஷில் குமார் விரும்பவில்லை. இதையடுத்து வீட்டை காலி செய்வது தொடர்பாக பிரச்சினை எழுந்தது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக வீரர்கள் மத்தியில் ஆசிரியராக மதிக்கப்பட்ட சுஷில்குமார், சாகர் தன்கர் தரப்பினரால் அவமதிக்கப்பட்டுள்ளார். இதனால் வருத்தமடைந்த சுஷில் குமார், சாகர் தன்கருக்கு பாடம் கற்பிக்க விரும்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்தே சாகர் தன்கரை மே 4-ம் தேதி இரவில் சத்ரசல் ஸ்டேடியத்துக்கு கடத்திச் சென்று சுஷில் குமார் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சாகர் தன்கர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.