

தலித் மக்கள் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியுமாறு புகார்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னத்தில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘தலித்துகளாக பிறப்பதற்கு ஒருவரும் விரும்ப மாட்டார்கள்’’ என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவரது இந்த கருத்து தலித் மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கூறி, மேற்கு கோதாவரி, சித்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலித் பிரிவு நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அதில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் சந்திர பாபு நாயுடு பேசிய ‘சிடி’யையும் ஆதாரமாக இணைத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரகுவீரா ரெட்டியும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ‘அடுத்த பிறவியில் தான் தலித்தாகவே பிறக்க விரும்புவதாக’ குறிப்பிட்டுள்ளார்.