Published : 04 Aug 2021 06:20 PM
Last Updated : 04 Aug 2021 06:20 PM

டெல்லி சிறுமியின் குடும்பத்துடனான புகைப்படம்: ராகுல் காந்தி, ட்விட்டர் இந்தியாவுக்கு தேசிய குழந்தைகள் ஆணையம் நோட்டீஸ்

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி சிறுமியின் குடும்பத்துடனான புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்திருந்த நிலையில், ட்விட்டர் இந்தியாவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, தலைநகர் டெல்லியின் நங்கல் பகுதியில் 9 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இன்று ஆறுதல் தெரிவித்தார்.

டெல்லியில் தென்மேற்குப் பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயதுச் சிறுமியை மதகுருவும், இடுகாட்டில் பணியாற்றிவரும் 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தனர். சிறுமியின் உடலைப் பெற்றோருக்குத் தெரியாமல் எரித்துவிட்டனர்.

இந்நிலையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை இன்று காலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்தித்துப் பேசி, ஆறுதல் தெரிவித்தார். அந்தப் புகைப்படத்தையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில், “ தலித் குடும்பத்தின் மகள் இந்த தேசத்தின் மகளும்கூட” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில், "பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளத்தை புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்துவது போக்ஸோ சட்டத்தின் படி தவறானது. ஆகையால் ட்விட்டர் இந்தியா அந்தப் பதிவை நீக்குமாறு கேட்கிறோம். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

டெல்லி சிறுமி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினரை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டை டெல்லி அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x