Published : 04 Aug 2021 05:46 PM
Last Updated : 04 Aug 2021 05:46 PM

மாவட்ட வாரியான கோவிட் பாதிப்பு; தினசரி கண்காணிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

மாவட்ட வாரியான கோவிட் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை தினசரி கண்காணிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:

நாடுமுழுவதும் 8 மாநிலங்களிலிருந்து பெறப்படும் கோவிட்-19 உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை தோராயமாக மதிப்பிட முடியுமே தவிர துல்லியமாக தெரிய வராது என்றும் ஒரு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.‌

குடிமை பதிவு அமைப்புமுறை மற்றும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு முறை ஆகியவற்றிலிருந்து பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இந்த செய்தியில் இடம் பெற்றிருப்பதால் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்படுவதாக தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் மற்றும் அதன் மேலாண்மை கொள்கைகளின்படி ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்படாமல் இருக்கலாம். ஆனால், உயிரிழப்புகள் விடுபடுவதற்கு வாய்ப்பில்லை. 2020 டிசம்பர் 31 நிலவரப்படி உயிரிழப்பு விகிதம் 1.45%ஆக இருந்தது. 2021 ஏப்ரல்- மே மாதங்களில் இரண்டாவது அலையில் எதிர்பாராத அதிகரிப்பு ஏற்பட்டபோதும் இன்று உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது.

மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகள் பற்றி மாநில அரசுகளுக்கும் மாநில அரசுகள் மூலம் மத்திய அமைச்சகத்திற்கும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்தியாவில் ஏற்படும் கோவிட்-19 சம்பந்தமான உயிரிழப்புகளைத் துல்லியமாக பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை கடந்த ஆண்டு மே மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டது.

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சரியான உயிரிழப்புகளை பதிவு செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி உயிரிழப்புகளை பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் முறையான தகவல்தொடர்பு வாயிலாகவும் காணொலிக் காட்சிகள் மூலமாகவும் மத்திய குழுக்களின் வாயிலாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை அன்றாடம் தொடர்ந்து கண்காணிக்குமாறும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் பதிவு செய்யத் தவறியிருந்தால் அதனைத் தடுப்பதற்காக தங்களது மருத்துவமனைகளில் முழு ஆய்வை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

வலுவான குடிமை பதிவு அமைப்புமுறை நாட்டில் ஏற்படும் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்கிறது. நீண்டகால நடைமுறையாக இருந்த போதும் எந்த இறப்பும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தரவுளை சேகரித்து அவற்றை ஒருங்கிணைத்து இலக்கங்களை வெளியிடுகிறது.

விரிவான மற்றும் மிக அதிக எண்ணிக்கையிலான பணிகள் என்பதால், பொதுவாக இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டே வெளியிடப்படுகிறது. ஊடக செய்தியில் இந்தத் தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு தரமான மருத்துவ மேலாண்மை வழங்குவதில் முழு மருத்துவ அமைப்பு முறையும் கவனம் செலுத்தி வந்தது. சரியான பதிவுகளில் தவறு ஏற்பட்டிருக்கலாம். மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளில் திருத்தம் செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x