

டெல்லியில் உள்ள பழைய நங்கல் பகுதியில் 9 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு உத்தரவிட்ட டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
டெல்லியில் தென் மேற்கு பகுதியில் உள்ள கன்டோன்மண்ட் பகுதியில் உள்ள இடுகாட்டின் அருகே 9 வயது சிறுமி குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில் இடுகாட்டில் உள்ள கூலரில் தண்ணீர் கொண்டுவர சிறுமி சென்றார்.
அதன்பின் 6 மணிக்கு மேல், இ்டுகாட்டில் பணியாற்ற 3 பேரும், மதகுருவும் சிறுமியின் தாயை அழைத்து சிறுமியின் உடலைக் காண்பித்தனர். கூலரில் தண்ணீர் எடுக்கும்போது சிறுமி இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று சிறுமியின் தாய் கூறியபோது , அங்கிருந்த மதகுருவும், மற்ற 3 பேரும் சிறுமியின் தாயை சமாதானம் செய்து, போலீஸாருக்கு தகவல் கூறவிடாமல் தடுத்தனர்.
போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தால், உடற்கூறு ஆய்வின் சிறுமியின் உறுப்புகளை மருத்துவர்கள் திருடிவிடுவார்கள் எனத் தெரிவித்து சிறுமியின் தாயை அச்சுறுத்தி சிறுமியின் உடலை எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், டெல்லி மகளிர் ஆணையம் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளன. கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். ஐபிசி 302, 376, 506, போக்ஸோ சட்டம், எஸ்சிஎஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் குடும்பத்தினரை இன்று காலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரில்சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உரிய நீதி கிடைக்க துணை நிற்போம் என்று ராகுல் காந்தி உறுதிளித்துள்ளார்.
இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினரை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நேரில் சந்தித்தார். அப்போது குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கிடக் கோரி, நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிராகவும் மக்கள் கோஷமிட்டனர்.
அப்போது முதல்வர் கேஜ்ரிவால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் “ சிறுமியின் பெற்றோரைச் சந்தித்துப் பேசினேன். என்னதான் இழப்பீடு வழங்கினாலும் உயிரிழந்த நமது குழந்தை திரும்பிவரப் போவதில்லை.
இந்த குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதி துரதிர்ஷ்டமானது, இதை இழப்பீட்டால் ஈடு செய்ய முடியாது. ஆனாலும், டெல்லி அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு குடும்பத்தினருக்கு வழங்கும். அதுமட்டுமல்லாமல் சிறுமி கொலை குறித்து மாஜிஸ்டிரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எங்களின் உதவி தேவைப்பட்டால் முழுமையான ஒத்துழைப்பு அளிப்போம். தலைநகரில் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்தால்,அது உலகளவில் தலைநருக்கு நற்பெயரை பெற்றுத் தராது. இந்த வழக்கில் வாதிட இரு வழக்கறிஞர்கள் டெல்லி அரசு நியமிக்கும்” எனத் தெரிவித்தார்.