டெல்லியில் கொடூரம்; பலாத்காரம் செய்து 9 வயதுச் சிறுமி கொலை: பெற்றோரைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களிடம் பேசிய காட்சி |  படம்: ஏஎன்ஐ.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களிடம் பேசிய காட்சி | படம்: ஏஎன்ஐ.
Updated on
2 min read

தலைநகர் டெல்லியின் நங்கல் பகுதியில் 9 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இன்று ஆறுதல் தெரிவித்தார்.

டெல்லியில் தென்மேற்குப் பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயதுச் சிறுமியை மதகுருவும், இடுகாட்டில் பணியாற்றிவரும் 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தனர். சிறுமியின் உடலைப் பெற்றோருக்குத் தெரியாமல் எரித்துவிட்டனர்.

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துள்ளனர். ஐபிசி 302, 376, 506, போக்சோ சட்டம், எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து டெல்லி தென்மேற்கு போலீஸ் ஆணையர் இன்கிட் பிரதாப் சிங் கூறுகையில், “பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் இடுகாட்டின் அருகேதான் வசித்து வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில் இடுகாட்டில் உள்ள கூலரில் தண்ணீர் கொண்டுவருவதற்குச் சிறுமி சென்றார்.

அதன்பின் 6 மணிக்கு மேல், இ்டுகாட்டில் உள்ள 3 பேரும், மதகுருவும் சிறுமியின் தாயை அழைத்து சிறுமியின் உடலைக் காண்பித்தனர். கூலரில் தண்ணீர் எடுக்கும்போது சிறுமி இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த மதகுருவும், மற்ற 3 பேரும் சிறுமியின் தாயை சமாதானம் செய்து, போலீஸாருக்குத் தகவல் கூறவிடாமல் தடுத்தனர்.

போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தால், உடற்கூறு ஆய்வின் சிறுமியின் உறுப்புகளை மருத்துவர்கள் திருடிவிடுவார்கள் எனத் தெரிவித்து சிறுமியின் தாயை அச்சுறுத்தி சிறுமியின் உடலை எரித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை இன்று காலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்தித்துப் பேசி, ஆறுதல் தெரிவித்தார். அந்தப் புகைப்படத்தையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில், “ தலித் குடும்பத்தின் மகள் இந்த தேசத்தின் மகளும்கூட” எனத் தெரிவித்துள்ளார்.

அதன்பின் ராகுல் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரிடம் பேசினேன். அவர்கள் நீதி மட்டுமே தேவை, வேறு ஏதும் வேண்டாம் என்றனர். நீதி அவர்களுக்கு வழங்கப்படாது என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். அதை நாங்கள் செய்வோம். உங்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன் எனத் தெரிவித்தேன். அவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை ராகுல் காந்தி ஆகிய நான் துணை இருப்பேன்” எனத் தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ 9 வயது அப்பாவிச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது வெட்கக்கேடு. டெல்லியில் சட்டம் - ஒழுங்கை மேலும் மேம்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்திக்க இருக்கிறேன். அந்தக் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்கத் தேவையான அனைத்தும் செய்வேன்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in