விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லையா?- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லையா?- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி
Updated on
1 min read

விவசாயிகளின் பிரச்சினைகள்குறித்து பேச எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லையா? என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், புதியவேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.

இந்நிலையில் நேற்று மக்களவை கூடியபோது எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:

மக்களவை செயல்பாடுகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகியுள்ளது. மக்களவை என்பது, மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை முன்வைப்பதற்கான இடமாகும்.

நீங்கள் அனைவரும் அவையின்மரியாதைக்குரிய உறுப்பினர்கள். நாட்டுக்கும் சமூகத்துக்கும் உங்களின் நடத்தை வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினர்கள் இருக்கைக்கு திரும்ப வேண்டும். கோஷம் போடுவது, கூக்குரலிடுவது போன்ற செயல்கள் அவையின் கவுரவம் மற்றும் அரசிய லமைப்பு மரபுகளுக்கு ஏற்புடையதல்ல.

இன்று நான் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக 7 விஷயங்களை விவாதத்துக்கு எடுத்திருந்தேன். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி நேரத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சரிடம் நீங்கள் (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) கேள்வி எழுப்பலாம். இதன் மூலம் விவசாயிகளின் பிரச்சினை முடிவுக்கு வரும்.

ஆனால் நீங்கள் விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர்களது பிரச்சினைகள் குறித்து பேச நீங்கள் விரும்பவில்லையா?

நீங்கள் நாட்டு மக்களால் அவர்களது குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு இங்கு வந்துள்ளீர்கள். எனவே நீங்கள் அவர்களது பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும்.

அவையின் கண்ணியத்தைக் காத்து, அவைக்கு மரியாதை தந்து பொறுப்புள்ள உறுப்பினர்களாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் பொறுப்புள்ள உறுப்பினர்களாக நடக்கவில்லை. இது சரியல்ல.

இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து அவையை அவர் ஒத்திவைத்தார்.-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in