

கேரளா தான் நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று பெருமை பொங்க அறிவித்தார்.
கேரளாவில் தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளுக்கான 5 முக்கிய திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடந்தது. கோழிக்கோடு அருகே ‘சைபர் பார்க்’ என்ற இடத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசிய தாவது:
கேரள அரசு தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்து வதில் சிறப்பாக செயலாற்றுகிறது. கிராம பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக பிராட்பேண்ட் வசதி கிடைக்க வகை செய்துள்ளது.
கேரளாவில் கடந்த 2002-ம் ஆண்டு அக் ஷயா என்ற ‘இ-லிட்ரசி’ கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ‘இ-லிட்ரசி’ திட்டம் அமலாகி இருப்பது கேரளாவில் தான்.
உயர் நிலைப் பள்ளி மாணவர் களுக்கு அடிப்படை கணினி அறிவை மேம்படுத்த, ‘ஐடி@ஸ்கூல் புராஜக்ட்’ திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப் பட்டுள்ளது. அரசு சேவைகள் அனைத்தும் இணையதளம் மூலம் வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற் போது அனைத்து துறைளை யும் இணைத்து 600க்கும் மேற்பட்ட இணைய நிர்வாக செயலிகளையும் (ஆப்ஸ்) கேரள அரசு பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாகவே நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெறுகிறது.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
மேலும், மலபார் பகுதியில் ஐ.டி. பூங்காவையும் பிரணாப் திறந்து வைத்தார். தவிர கேரளாவில் சுற்றுலாத் துறை சார்பில், ‘முசிறி பாரம்பரிய பாதுகாப்பு திட்டம்’ என்ற பெயரில் அரண்மனைகள் அரிய பொருட்கள் உட்பட பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் திட்டத்தையும் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார்.