Published : 10 Jun 2014 03:01 PM
Last Updated : 10 Jun 2014 03:01 PM

கராச்சி விமான நிலையம் அருகே மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் படையினர் முறியடிப்பு

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலைய வளாகத்தில் உள்ள சோதனைச் சாவடி மீது மறைந்திருந்த தலிபான் தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகள் விமான நிலையத்தின் சுற்றுப்பகுதியில் உள்ள கட்டிடத்திலிருந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர். அங்கிருந்து சோதனைச் சாவடியின் இரண்டாவது அறையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் நீடித்த கடும் சண்டையின் முடிவில், தீவிரவாதிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து ஓடியதாக பாதுகாப்புப் படையினரை மேற்கோள்காட்டி 'டான்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த இருதரப்பு தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் எல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கராச்சி விமான நிலையத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியதை அடுத்து, விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது.

முன்னதாக நேற்று முன் தினம கராச்சி விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர் என்பதும், அதே இடத்தில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கராச்சியில் நடந்துள்ள இந்த 2-வது தாக்குதல் சம்பவத்திற்கும் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இவர்கள் விமானங்களை தகர்க்கும் நோக்கத்தோடு இந்தத் தாக்குதலை அரங்கேற்ற வந்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்நாட்டின் உள்துறை செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் அசிம் பாஜ்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து குறுகையில், "தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து எழுந்த பயங்கர சப்தம், கராச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீவிரவாத தாக்குதலை அடுத்து விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. மேலும், தப்பித்து சென்ற தீவிரவாதிகள், கராச்சி நகரில் மட்டுமே பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதால், பாகிஸ்தான் ராணுவ விமானம், தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கையில் தற்போது ஈடுப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x