கைதிகளுக்கான சீருடையை அணிய மறுத்த சஞ்சய் தத்

கைதிகளுக்கான சீருடையை அணிய மறுத்த சஞ்சய் தத்
Updated on
1 min read

எரவாடா சிறைக்கு மாற்றப்படும் முன் மும்பை ஆர்தர் சாலை சிறையில் நடிகர் சஞ்சய் தத் தண்டனை அனுபவித்த போது கைதிகளுக்கான சீருடையை அணிய மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சிறை நிர்வாகத்துறையின் துணை தலைமை இன்ஸ்பெக்டர் ஸ்வாதி சாதே கூறும்போது, “தொடக்க நாட்களில் கைதிகளுக்கான உடையை அவர் அணிய மறுத்தார், ஆனால் அதன் பிறகு கண்டிப்பான வார்த்தைகளில் அவரிடம் எடுத்துக் கூறிய பிறகு அணிய ஒப்புக் கொண்டார்” என்றார்.

எரவாடா சிறையில் சஞ்சய் தத்தின் தினசரி பணிகள் என்ன என்று இவரிடம் கேட்ட போது, “அதாவது 5.30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலை வழிபாடு, பயிற்சி, தேநீர், காலை உணவு பிறகு அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை அவர் செய்ய வேண்டும். மற்ற கைதிகள் பணியிடத்தில் பணியாற்ற வேண்டும், ஆனால் சஞ்சய் தத் பாதுகாப்பு காரணங்களினால் அவரது சிறை அறையிலேயே, பிரம்பு வேலை மற்றும் காகிதப் பைகள் செய்யும் வேலையில் ஈடுபடுவார்.” என்றார்.

மேலும் மற்ற கைதிகளுக்கு உற்சாகமூட்டும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் சஞ்சய் தத் ஈடுபடுவார். இன்னர் சர்க்கியூட் ஒய்.சி.பி.வானொலியில் அவர் ரோடியோ ஜோக்கியாகவும் செயலாற்றினார்.

சஞ்சய் தத் எரவாடா சிறையில் 42 மாதங்கள் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in