

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஜூலை 7-ம் தேதி திடீரென மின்சாரத்தின் தேவை அதிகரித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இதுவரை இல்லாத அளவில், அதிகளவிலான மின்சாரத்தின் தேவையை நாடு கடந்த ஜூலை 7ம் தேதி 12.01 மணிக்கு கண்டது. மின் தேவை 200570 மெகா வாட். இது கடந்த 2020 ஜூலை 2ம் தேதி 22.21 மணி அளவில் ஏற்பட்ட மின் தேவையை விட 17.6 சதவீதம் அதிகம். இதை பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்பரேஷன் லிமிடெட் (POSOCO) தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரி மின் நுகர்வு 4049 மில்லியன் யூனிட்டாக இருந்தது. இது கடந்தாண்டு ஜூலை மாத சராசரி மின் நுகர்வு அளவை (3662மில்லியன் யூனிட்டை) விட 10.6 சதவீதம் அதிகம். கடந்த ஜூலை 7ம் தேதி அன்று மின் நுகர்வு 4508 மில்லியன் யூனிட்டாக பதிவாகியது. இது கடந்தாண்டு ஜூலை 28ம் தேதி மின் நுகர்வு அளவான 3931 மில்லியன் யூனிட்டை விட 14.7 சதவீதம் அதிகம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையும், நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. சராசரி சூரிய மின்சக்தி உற்பத்தி கடந்த ஜூலையில் நாள் ஒன்றுக்கு 158 மில்லியன் யூனிட்டாக பதிவாகியது. இது 2020 ஜூலை சராசரி அளவான 147 மில்லியன் யூனிட்டை விட 7.6 சதவீதம் அதிகம். சராசரி காற்று மின்சக்தி உற்பத்தி, கடந்த ஜூலையில் நாள் ஒன்றுக்கு 349 மில்லியன் யூனிட்டாக பதிவானது.
இது 2020 ஜூலை சராசரி அளவான 212 மில்லியன் யூனிட்டை விட 64.5 சதவீதம் அதிகம். கூடுதலாக, சூரிய மின்சக்தி மற்றும் காற்று மின்சக்தி உற்பத்தி இதுவரை இல்லாத அளவாக கடந்த 27ம் தேதி 43.1 ஜிகா வாட்டாக பதிவாகியது. இதற்கு முன்பு கடந்த ஜூன் 11ம் தேதி 41.1 ஜிகா வாட்டாக பதிவாகியது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.