

கேரளாவில் தொடர்ந்து கரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில் அங்கு இன்று ஒரே நாளில் புதிதாக 23,676 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கேரளாவில் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. நோய் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே சிங் தலைமையில் இந்த 6 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு கேரளாவில் 7 மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் கேரளாவில் தொடர்ந்து கரோனா தொற்று உயர்ந்தே காணப்படுகிறது. இன்று ஒரே நாளில் அங்கு புதிதாக 23,676 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 148 பேர் பலியாகியுள்ளனர். கரோனா தொற்று விகிதம் என்பது 11.87 சதவீதமாக உள்ளது.
15,626 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,73,221 ஆக உள்ளது.
அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 4276 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மிக குறைவாக இடுக்கி மாவட்டத்தில் 340 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.