Published : 03 Aug 2021 07:02 PM
Last Updated : 03 Aug 2021 07:02 PM

தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

தமிழகம் உட்பட எந்தவொரு மாநிலத்தையும் இரண்டாகப் பிரிப்பதற்கான திட்டம் ஏதும் இல்லை என, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக, மக்களவை உறுப்பினர்கள் பாரிவேந்தர் மற்றும் ராமலிங்கம் ஆகிய இருவரும் எழுத்துப்பூர்வமாக, "தமிழகம் உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு மாநிலத்தையும் இரண்டாகப் பிரிப்பதற்கு மத்திய அரசு திட்டம் வைத்துள்ளதா? அப்படி இருந்தால் அதற்கான நோக்கம், காரணத்தைத் தருக.

தமிழகம் உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு மாநிலத்தையும் இரண்டாகப் பிரிக்கக் கோரி, மத்திய அரசுக்குத் தனிநபர் மற்றும் அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் ஏதேனும் வந்துள்ளனவா? அப்படியிருந்தால், அந்தக் கோரிக்கை எப்போது எழுப்பப்பட்டது என்ற விவரத்தை தருக" எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இன்று (ஆக. 03) எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

"புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் தனிநபர்களிடமிருந்தும் அமைப்புகளிடமிருந்தும் பல்வேறு காலகட்டங்களில் வந்துள்ளன. ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவது நமது நாட்டின் கூட்டாட்சி அரசியலில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. தொடர்புடைய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு, புதிய மாநிலங்களை உருவாக்கும் விஷயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. தற்போது, மாநிலங்களைப் பிரிப்பதற்கான திட்டம் ஏதும் இல்லை".

இவ்வாறு நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது மத்திய அரசு வெளியிட்ட விவரக் குறிப்பில், எல்.முருகன் பிறந்த நாமக்கல் மாவட்டம், 'கொங்கு நாடு' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ன. இந்நிலையில், தமிழகம் உட்பட எந்தவொரு மாநிலத்தையும் இரண்டாகப் பிரிப்பதற்கான திட்டம் ஏதும் இல்லை என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x