Last Updated : 03 Aug, 2021 11:53 AM

 

Published : 03 Aug 2021 11:53 AM
Last Updated : 03 Aug 2021 11:53 AM

பெகாசஸ் விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காலை சிற்றுண்டி அளித்து ராகுல் காந்தி ஆலோசனை

டெல்லியில் நடந்த சிற்றுண்டி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்க முயற்சி எடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இன்று காலை சிற்றுண்டி அளித்து, அவர்களுடன் சிறப்பு ஆலோசனை நடத்தினார்.

ராகுல் காந்தியுடன் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு, அவருடன் சேர்ந்து ஏராளமான எம்.பி.க்கள் சைக்களில் நாடாளுமன்றம் நோக்கிச் சென்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இது தவிர, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேசிஎம், ஆர்எஸ்பி, ஜேகேஎன்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிகளும் பங்கேற்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகள் மட்டும் ஆலோசனையில் பங்கேற்கவில்லை. அழைப்பு விடுத்தும் இரு கட்சிகளும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த முறை ராகுல் காந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த முறை பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் விவகாரத்தில் கடந்த இரு வாரங்களாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டு வரும் நிலையில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடி இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

கூட்டத்துக்குப் பின் ராகுல் காந்தி பேசுகையில், “என்னுடைய கண்ணோட்டத்தில் ஒரே முக்கியத்துவம் என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். மக்களின் குரலாக இருக்கும் நம்முடைய குரல் இணைந்தால், சக்திவாய்ந்த குரலாக வெளிவரும், ஆர்எஸ்எஸ், பாஜகவை அடக்குவதுதான் கடினமானது” எனத் தெரிவித்தார்.

மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், “பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட எந்த விவகாரத்தையும் மத்திய அரசு காதுகொடுத்துக் கேட்பதில்லை. மத்திய அரசில் உள்ள ஒருவரும் இதைக் கவனிப்பதில்லை. ஆதலால், எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர முடிவு செய்துள்ளோம், நாம் அனைவரும் ஒன்று திரள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி, மகுவா மொய்த்ரா, சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஜா, திமுக சார்பில் கனிமொழி எம்.பி., சமாஜ்வாதி சார்பில் ராம் கோபால் வர்மா, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x