

டெல்லியில் சமூக வலைதளம் மூலம் நண்பராக பழகி, நேரில்வரவழைத்து பலாத்கார குற்றவாளியை கைது செய்துள்ளார் பெண் போலீஸ்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஜூலை 30-ம் தேதி ஒரு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர், 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை சந்தித்து விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தோம். முதலில் தயங்கிய சிறுமி, பின்னர் புகார் மனு செய்தார்.
இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து துணை ஆய்வாளர் பிரியங்கா சைனி விசாரணையை தொடங்கினார். குறிப்பாக, பலாத்காரம் செய்த இளைஞரின் பெயரைக் கொண்ட 100 பேரின் புகைப்படங்களை முகநூலில் தேடி எடுத்துள்ளார். அந்தப் படங்களை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காட்டியதில் அவர் குற்றவாளியை அடையாளம் காட்டி உள்ளார்.
இதையடுத்து, முகநூலில் புதிதாக ஒரு கணக்கை தொடங்கிய பிரியங்கா, அதிலிருந்து அந்த இளைஞருக்கு நட்பு கோரிக்கை விடுத்துள்ளார். இதை ஏற்ற பின்னர் அவருடன் கருத்து பரிமாற்றம் செய்துள்ளார். செல்போன் எண்ணைக் கேட்டபோது தர மறுத்துள்ளார். பின்னர் நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாக பிரியங்காதெரிவித்துள்ளார். ஜூலை 31-ம்தேதி இரவு 7.30 மணிக்கு தஷ்ரத்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர், துவாரகா செக்டார்-1 பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில், ஸ்ரீமாதா மந்திர் மஹாவீர் என்கிளேவுக்கு வருமாறு பிரியங்காவிடம் கூறியுள்ளார். அந்த இடத்துக்கு வந்த அந்த இளைஞரை சாதாரண உடையில் இருந்த போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 15 மாதங்களில் 6 சிறுமிகளுடன் பழகியதாகவும் யாரிடமும் தன்னைப் பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை என்றுஅந்த இளைஞர் கூரியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.