

உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித், தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (என்ஏஎல்எஸ்ஏ) நிர்வாகத் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
ஹரியாணா சட்ட சேவைகள் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அனைவருக்கும் நீதி கிடைப்பதற்கு, சட்ட சேவையின் தரம்தான் திறவுகோல்’ என்ற நிகழ்ச்சியில் நீதிபதி லலித் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:
குற்ற விசாரணைகளின் போது அல்லது வழக்கு விசாரணை நடக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதிடுவதற்கு யாரும் இல்லை என்ற நிலை இருக்க கூடாது. தன் தரப்பு வாதத்தை முன்வைக்க அனைத்து வாய்ப்புகளையும் வழங்க வேண்டும்.
இதற்காக நாட்டில் உள்ளஅனைத்து போலீஸ் நிலையங் களிலும், சட்ட உதவி பெறும் உரிமை மற்றும் இலவச சட்ட உதவி சேவை தொடர்பான தகவல்கள் அடங்கிய பலகையை வைக்க வேண்டும். அனைவரும் தன் தரப்பு வாதத்தை முன்வைப் பதை உறுதி செய்ய இதுதான் முதல் அடியாக இருக்கும்.
இவ்வாறு நீதிபதி யு.யு.லலித் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ‘சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றையும் யு.யு.லலித் வெளியிட்டார். அத்துடன் 22 மாவட்டங்களில் சட்ட சேவை மையங்களில் அமைக்கப்பட்ட வீடியோ கான்பரன்சிங் வசதி தொடங்கி வைத்தார். சட்ட உதவி உரிமை, இலவச சட்ட உதவி சேவைக்கான தகவல்கள் அடங்கிய போஸ்டரும் வெளியிடப்பட்டது.