

உத்தர பிரதேசத்தில் இந்த வருடமும் முஹர்ரம் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிஜிபி முகுல் கோயல் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான 40 வருட மோதலை குறிப்பிட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
முஸ்லிம்களின் இஸ்லாமியக் காலண்டரின் முதல் மாதமாக வருவது முஹர்ரம். இதன் 10 -வது நாளில் முஹர்ரம் தியாகத் திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் முஸ்லிம்கள் ‘தாஜியா’ எனும் புனிதப் பதாகைகளை ஏந்தி தம் பகுதிகளில் ஊர்வலம் நடத்துவது வழக்கம்.
வரும் ஆகஸ்ட் 10 முதல் முஸ்லிம்களின் முஹர்ரம் மாதம் துவங்குகிறது. இந்த முஹர்ரமிற்காக, ஷியா மற்றும் சன்னி பிரிவுகள் தனித்தனியாக இருவேறு நாட்களில் ஊர்வலத்தை நடத்துவார்கள். இதற்கு கரோனா பரவல் காரணமாக உத்தரபிரதேச அரசு இரண்டாவது வருடமாகத் தடை விதித்துள்ளது.
கரோனாவின் மூன்றாவது அலையின் அச்சம் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகமும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் உத்தர பிரதேசக் காவல்துறையின் சார்பில் டிஜிபி முகுல் கோயல், மாவட்ட தலைமைக் கண்காணிப்பாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி தடை விதித்துள்ளார். இத்தடைக்காக ஷியா மற்றும் சன்னி ஆகிய இருதரப்பின் முஸ்லிம் பிரிவுகளும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்ட சில வாசகங்கள் மீது சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. இதில், ஷியாக்கள் அதிகம் வாழும் லக்னோ உள் ளிட்ட நகரங்களின் முஹர்ரம் ஊர்வலங்களில் கடந்த 40 வருடங்களாக நிகழ்ந்த மோதல்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பதிவுகள், முஸ்லிம்களின் இரண்டு பிரிவுகளையும் கோபத்துக்கு உள்ளாக்கி விட்டது. இதனால், அச்சுற்றறிக்கையின் வாசகங்களை வாபஸ் பெற வேண்டும் என டிஜிபியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஷியா பிரிபின் சாந்த்கமிட்டியின் தலைவரான மவுலானாசைப் அப்பாஸ் நக்வீ கூறும்போது, ‘‘கரோனா பரவலால் சமீபத்தில் இந்துக்களின் காவடி யாத்திரைக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதன் சுற்றறிக்கையில் எந்த தரப்பினரையும் புண்படுத்தும் வகையிலான வாசகங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால்,முஸ்லிம்களுக்கான முஹர்ரம் சுற்றறிக்கையில் மட்டும் ஆட்சேபத்துக்குரிய வாசகங்களை டிஜிபி குறிப்பிட்டது கண்டனத்துக்கு உரியது. அமைதி சூழலைக் கெடுக்கும் வகையிலானதை உடனடியாக வாபஸ் பெறாவிட்டால் முஸ்லிம்கள் இடையே போராட்டச் சூழல் உருவாகும்’’ எனத் தெரிவித்தார்.
தியாகத் திருநாளின் பின்னணி
முஹர்ரம் அனுசரிப்பதில், முஸ்லிம்கள் இடையே பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் முக்கியமானதாக கி.பி 680 (ஹிஜ்ரி 61)-ம் ஆண்டில் ஈராக்கின் கர்பாலா என்னும் இடத்தில் நடந்த போரில் இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசைன் வீரமரணம் இடம் பெற்றுள்ளது. இதில் இமாம் உசைன் தரப்பினருக்கு ஏற்பட்ட தோல்வியால் அவர்கள் சிறிது காலத்துக்கு பின் தனிக்குழுவாக வெளியேறி ‘ஷியா’ எனும் பெயரில் ஒரு புதிய பிரிவாயினர்.
68 நாட்களுக்கு...
இதனால், ஷியா முஸ்லிம்களால் முஹர்ரம் 68 நாட்களுக்கானத் துக்கத் தினமாகத் தீவிரமாக அனுசரிக்கப்படுகிறது. ஷியா பிரிவினர் உலகம் முழுவதிலும் பரவி வாழ்கின்றனர். இந்தியாவில் இவர்கள், பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அதிகம். இதன் பின்னணியில் உள்ள துக்கத்தை அறியாத பலர், தம் முஸ்லிம் நண்பர்களுக்கு முஹர்ரம் வாழ்த்துக்கள் தெரி விப்பதும் உண்டு.