

கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டில் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பாக ஆந்திர அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி என்.வி. ரமணா விசாரணை நடத்தினார். அப்போது, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து ஏற்கெனவே மத்திய அரசு ஒரு வாரியத்தை நியமித்து அதற்கான அளவீட்டையும் தீர்மானித்து அரசிதழில் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இதனால், ஆந்திர அரசின் இந்த மனுவை ஏற்க தேவையில்லை என தெலங்கானா அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டதுது.
இதற்கு, அக்டோபர் மாதத்தில் இருந்துதான் மத்திய அரசின் கெஜட் உத்தரவு அமல் படுத்தப்பட உள்ளது. இதற்குள் தெலங்கானா மாநில அரசு கிருஷ்ணா நீரை உபயோகப்படுத்திக் கொள்ளும். இதனால், ஆந்திர விவசாயிகள் நஷ்டம் அடைவர் என்பதால்தான் நாங்கள் மனு தாக்கல் செய்தோம் என ஆந்திர அரசு சார்பில் கூறப்பட்டது.
இந்த இரு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறும்போது, “ஆந்திராவும், தெலங்கானாவும் நடுநிலையான ஒருவரை தேர்ந்தெடுத்து கிருஷ்ணா நதிநீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதே சிறந்தது. மத்திய அரசு தரப்பிலிருந்து உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது அறிவுரை தேவைப்பட்டாலோ நான் இவ்வழக்கை தள்ளிப் போடுகிறேன்.
ஆனால், இவ்வழக்கை நான்விசாரிப்பது நல்லதல்ல. ஏனெனில், நான் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களையும் சேர்ந்தவன். ஆதலால், இவ்வழக்கை வேறுஅமர்வுக்கு கூட மாற்றி விடுகிறேன். இந்த விஷயத்தில் எதுவானாலும் வரும் புதன்கிழமை எனக்கு தெரிவிக்கவும்" என கூறி வழக்கை வரும் புதன்கிழமை வரை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.
இவ்வழக்கை விசாரித்து ஒருவேளை தீர்ப்பளிக்க நேர்ந்தால், ஆந்திரா அல்லது தெலங்கானா என ஏதாவது ஒரு மாநிலத்திற்கு மட்டுமே நீதி வழங்கிட முடியும்.
அப்படி நேர்ந்தால், இரு மாநிலத்தையும் சேர்ந்த தலைமை நீதிபதிக்கு அவப்பெயர் வரும் என்பதால், இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார் என உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.