Published : 03 Jun 2014 09:20 AM
Last Updated : 03 Jun 2014 09:20 AM

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் மரணம்

மத்திய கிராம வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே டெல்லியில் தனது வீட்டிலிருந்து விமான நிலையம் செல்லும் வழியில் நடந்த விபத்தில் மரணமடைந்தார். 64 வயதான இவர் பதவியேற்ற ஒரே வாரத்தில் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள அவரது பீட் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் முண்டே கலந்து கொள்ள வேண்டி இருந்தது. இதற்காக மும்பை செல்ல டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் கிளம்பினார் முண்டே. லோதி சாலையில் உள்ள அரசு வீட்டிலிருந்து காலை 6.15 மணிக்கு கிளம்பிய அமைச்சரின் கார் அடுத்த 20 நிமிடத்திற்குள் விபத்துக்குள்ளானது.

உடனடியாக முண்டேவை 3 கி.மீ. தொலைவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது காரிலேயே கொண்டு சென்றனர். அங்கு முண்டேவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு, அவர் அதிர்ச்சி காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டு வழியிலேயே இறந்து விட்டார் என காலை 7.45 மணிக்கு அறிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கோபிநாத் பயணம் செய்த கார் மீது மற்றொரு கார் மோதியதால் அதிலிருந்து அவர் விழுந்துவிட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் பெரும் முயற்சி செய்தனர்.

ஆனால், அவரது இதயம் மற்றும் நாடித்துடிப்புகள் அடங்கிவிட்டது. அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதை சொல்வதற்கு எனக்கு மிகவும் துக்கமாக இருக்கிறது. அவர் இறப்பு மகாராஷ்டிர மாநில அரசியலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பாகும்’’ என்றார்.

இந்தத் தகவல் முண்டேவின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் மும்பை விமான நிலையத்தில் கிளம்பத் தயாராக இருப்பதாகவும், அவர்கள் வந்தபின் உடலை பெற்று சென்று அவரது சொந்த ஊரான பீட் மாவட்டத்தின் பர்லி கிராமத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை செய்யப்படும் எனவும் கட்கரி தெரிவித்தார்.

விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியால் உயிரிழந்ததாகக் கருதப்படும் முண்டேவின் உடலில் வேறு எங்கும் காயங்கள் இல்லை. அதேபோல், அவருடன் காரில் பயணம் செய்த பாதுகாவலர் மற்றும் ஓட்டுநருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. விபத்து பற்றிய தகவலை பாதுகாப்பு அதிகாரியான நாயர், முதன் முதலில் கட்கரிக்கு போன் செய்து கூறியுள்ளார்.

இந்தத் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறுகையில், ‘‘பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபின் அவரது இறப்பின் சரியான காரணம் தெரியும். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்த தகவலை பாஜகவின் மற்ற தலைவர்களுக்கும் போன் மூலம் தெரிவித்தேன். இந்த துக்கத்தை சொல்லால் விளக்க முடியாது’’ எனத் தெரிவித்தார்.

கோபிநாத் முண்டேவின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேதப் பரிசோதனை நடந்தது. அங்கிருந்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் சுமார் 12 மணிக்கு முண்டேவின் உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.

மும்பையின் வொர்லி பகுதியில் வசிக்கும் முண்டேவின் குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது மனைவி பிரதின்யா முண்டே, மூத்த மகளும் பாஜக எம்.எல்.ஏ.வுமான பங்கஜ் முண்டே, மருத்துவம் பயிலும் இரண்டாது மகள் பிரீத்தம் முண்டே மற்றும் சட்டம் பயிலும் மூன்றாவது மகள் ஆகியோர் டெல்லி கிளம்பி வந்தனர்.

பாஜக அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்திய பின் முண்டேவின் உடல் விமானம் மூலம் மும்பை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நரிமன் பாயின்ட்டில் உள்ள பாஜகவின் அலுவலகத்தில் வைக்கப்படும். இன்று காலை, மும்பையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் லத்தூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக பர்லி கிராமத் திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப் படுகிறது.

டிரைவர் கைது

விபத்து நடந்தவுடன் அமைச்சரின் கார் மீது மோதிய டாடா இண்டிகாவின் ஓட்டுநர் குர்விந்தர் சிங் (32) கைது செய்யப்பட்டார். அவரது காரை போலீசார் கைப்பற்றி துக்ளக் சாலை காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

மிகவும் சிறிய அளவில் நடந்த இந்த விபத்து ஒரு உயிரை பலி வாங்கும் அளவிற்கு இல்லை எனக் கருதப்படுகிறது. எனினும், நடந்த விபத்தை ‘சதி’ எனும் கோணத்திலும் போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் விசாரணையில் அப்படி எதுவும் இல்லை என்பது தெளிவாகி இருப்பதாகக் கருதப்படுகிறது.

மெஹராலி பகுதியைச் சேர்ந்த குர்விந்தர் சிங், இம்பீரியல் ஓட்டலுக்காக பணிபுரிந்து வந்தது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், விபத்து நடைபெற்ற நேரத்தில் அவர் ஓட்டல் பணியில் இல்லை என ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதன் பிறகு பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள டெல்லி நீதிமன்றத்தில் குர்விந்தர் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x