

கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் காலியாகவுள்ள நீதிபதிகளின் பதவிகளை நிரப்பும் வகையில், தகுதியானவர்களின் பெயர்களை பரிந்துரைக்கும்படி அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள நீதிமன் றங்களில் 400க்கும் மேற்பட்ட நீதிபதிகளின் பதவிகள் நிரப்பப் படாமல் காலியாகவுள்ளன. கடந்த ஓராண்டாக நீதிபதி கள் நியமிக்கப்படாத காரணத்தினால் பல்வேறு வழக்குகள் முடிக்கப்படாமல் தேக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலியாக உள்ள நீதிபதிகளின் பதவிகளை நிரப்ப உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தகுதியானவர்களின் பெயர்களை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கெனவே காலியாகவுள்ள 400 நீதிபதிகள் பதவிக்கு, 60 பேர் நிரப்பப்பட்டுவிட்டனர். மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான கொலீஜியமும் 120 பேரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. எனினும் 200 பதவிகள் நிரப்பப்படாமல் தொடர்ந்து காலியாக இருப்பதால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.