பாஜக தலைவர் மன்னிப்பை ஏற்கமாட்டோம்: சஞ்சய் ராவத் | குண்டர்கள் போன்று பேசுகிறார்கள்: நவாப் மாலிக் காட்டம்

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் | படம்: ஏஎன்ஐ.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் | படம்: ஏஎன்ஐ.
Updated on
2 min read

மும்பையில் உள்ள சிவசேனா பவனை இடிப்போம் என்று பாஜக தலைவர் பிரசாத் லாட் பேசியதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த என்சிபி செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், மகாராஷ்டிராவில் உள்ள பாஜகவினர் குண்டர்கள் போல் பேசுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவர் பிரசாத் லாட் பேசுகையில், “தேவைப்பட்டால் மும்பையின் மத்தியப் பகுதியில் உள்ள சிவசேனாவின் தலைமையகமான சிவசேனா பவனையும் இடிக்கத் தயங்கமாட்டோம்” எனத் தெரிவித்தார். பிரசாத் லாட் கருத்துக்குக் கடும் கண்டனம் எழுந்தநிலையில் தான் அவ்வாறு பேசவில்லை, ஊடகங்கள் திரித்து தவறாக வெளியிட்டுவிட்டன என்று தெரிவித்து மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் பாஜக தலைவர் பிரசாத் லாட் மன்னிப்பை ஏற்கமாட்டோம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “சிவசேனா பவனை இடிப்போம் என்று கூறிய பாஜக தலைவர் பிரசாத் லாட்டின் மன்னிப்பை ஏற்கமாட்டோம். பாஜக ஒருபோதும் சிவசேனா பவனை இடிக்க நினைக்காது. இதுபோன்று பேசுபவர்கள் பாஜகவினர் இல்லை. வெளியிலிருந்து வந்தவர்கள், ஏற்றுமதி செய்யப்பட்டவர்கள், இறக்குமதி செய்யப்பட்டவர்கள். இதுபோன்ற நபர்கள் மகாராஷ்டிராவில் பாஜகவை அழித்துவிடுவார்கள். இந்த மன்னிப்பை நாங்கள் ஏற்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக்

தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான நவாப் மாலிக் கூறுகையில், “மகாராஷ்டிராவில் உள்ள பாஜக தலைவர்கள் குண்டர்கள் போன்று பேசுகிறார்கள். அரசியலில் வன்முறையைப் பேசுவதும், ஒரு கட்சியின் அலுவலகத்தை இடித்துவிடுவேன் எனக் கூறுவதும் சரியானது அல்ல. பாஜக தனது நிர்வாகிகளையும், தலைவர்களையும் கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சிவசேனா கட்சி, தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் காட்டமாக எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

''பாஜகவினர் நடந்துகொள்ளும் முறையால், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கான அழிவு காலம் அருகே வந்துவிட்டது. சிவசேனா பவனை யாரெல்லாம் இழிவாகப் பார்த்தார்களோ அந்தத் தலைவர்களும், அவர்களின் கட்சியும் வோர்லி கழிவுநீரோடையில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.

சிவசேனாவுடன் பலருக்கும் அரசியல்ரீதியான வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சிவசேனாவுக்கு சவால் விடுத்துள்ளார்கள். ஒருபோதும் சிவசேனா பவனை இடித்துவிடுவதாகப் பேசியதில்லை.

பாஜக என்பது ஒருகாலத்தில் விசுவாசமான தொண்டர்கள், அடிமட்டம்வரையில் இருந்தார்கள். வெளியாட்களுக்கோ அல்லது கட்சியை தாழ்த்துபவர்களுக்கோ இடமில்லை என்று இருந்தது. ஆனால், தற்போது, கட்சியின் உண்மையான சிந்தாந்தங்களை கொண்டிருப்பவர்கள்கூட தரம்தாழ்ந்தவர்களைதான் உயர்த்திப் பிடிக்கிறார்கள். அதனால்தான் கூறுகிறோம், மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அழிவுகாலம் நெருங்கிவிட்டது.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in