

2015 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ஏ இன்னமும் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது குறித்து பதில் அளிக்க மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், உயர் நீதிமன்றங்கள் பதி்ல் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டில் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரே மறைவுக்கு மும்பையில் பந்த் கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகின் தாடா, ரேனு ஸ்ரீனிவாசன் ஆகிய இரு பெண்களும் சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த கருத்தையடுத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66ஏ பிரிவில் ஷாகின் தாடா, ரேணு ஸ்ரீனிவாசன் இருவரையும் மும்பை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கைதை எதிர்த்தும், தகவல் தொழில்நுட்பச்சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரியும் சட்டக்கல்லூரி மாணவரி ஸ்ரேயா சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக சட்டப்பரிவு இருப்பதாகக் கூறி ஐடி சட்டத்தில் 66-ஏ பிரிவை ரத்து செய்து 2015ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த சட்டத்தின் கீழ் மக்கள் யாரும் தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பின் நகலை நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும், போலீஸ் நிலையங்களுக்கும், அனைத்து உயர் நீதிமன்றங்கள்,மாவட்ட, விசாரணை நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைத்து அதைபின்பற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66-ஏ பிரிவில் நூற்றுக்கணக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட பிரிவில் எவ்வாறு வழக்குப் பதிவு செய்ய முடியும் எனக் கூறி பியுசிஎல் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குப் பதிவு செய்தது.
மேலும், ரத்துச் செய்யப்பட்ட சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹின்டன் ஃபாலி நாரிமன், கே.எம்.ஜோஸப், பி.ஆர் காவே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. பியுசிஎல் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் பாரிக்கும், மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வருகின்றனர். இந்த வழக்குகடந்த மாதம் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன்படி அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பதில்மனுத் தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில், “தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ ரத்து செய்து உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2015-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்
ஆனால், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறை மாநில அரசுகளின் கைகளில் இருக்கிறது, அவர்கள்தான் சைபர் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள். காவல்துறை மாநிலப் பட்டியலில் இருப்பதால், சட்டத்தை உத்தரவை நடைமுறைப்படுத்துதல், விசாரணை செய்தல், குற்றவாளிகளை கண்டுபிடித்தல், போலீஸாருக்கான வசதிகள் ஆகியவற்றை மாநில அரசுகள்தான் கவனிக்க முடியும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
தகவல்தொழில்நுட்பச் சட்டம் 66-ஏ பிரிவில் எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்று அனைத்து மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், நிர்வாகிகளுக்குத் தெரிவித்து, அவர்கள் மூலம் காவல்நிலையங்களுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்த தீர்ப்புக்குப்பின் நாடுமுழுவதும் ஐடி சட்டத்தின் 66ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்க தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் கேட்கப்பட்டுள்ளது, அந்த வழக்குகளை வாபஸ் பெறவும் கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் பதில்மனுவுக்கு பதில் அளித்து பியுசிஎல் வழக்கறிஞர் வாதிடுகையில், “ 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்தவரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அ ரசு எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்த வழக்கில் இரு அம்சங்கள் உள்ளன. முதலாவது போலீஸார், 2-வதாக இன்னும் இந்த பிரிவில் வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ காவல்துறை என்பது மாநில அரசுகளுக்கு உட்பட்டது. ஆதலால், இந்த வழக்கில் மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ப்பதுதான் சிறந்ததாக இருக்கும். அதன்பின்புதான் முழுமை உத்தரவு பிறப்பித்து தீர்த்து வைக்க முடியும். ஆதலால், மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், உயர் நீதிமன்ற பதிவாளர்களும் பதில் அளி்க்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். இந்த வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.