Last Updated : 02 Aug, 2021 12:12 PM

 

Published : 02 Aug 2021 12:12 PM
Last Updated : 02 Aug 2021 12:12 PM

சிஏஏ உள்பட பிரதமர் மோடி அரசின் முடிவுகளை உலகமே பாராட்டுகிறது; எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பாட் | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரமான 370 பிரிவு ரத்து உள்ளிட்ட பிரதமர் மோடி அரசின் முடிவுகளையும், கொள்கைகளையும் உலகமே பாராட்டுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என்று மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பாட் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பாட் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசுகளின் குறைபாடுகளை எப்போதெல்லம் மத்திய அரசு சரிசெய்யும்போது அதை எதிர்க்கட்சிகள் விரும்புவதில்லை. குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்து, 35ஏ பிரிவு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றை விரும்பவில்லை. தீவிரவாதிகள் மீதான துல்லியத் தாக்குதல், பாகிஸ்தான் ராணுவத்துடனான விமானப்படைத் தாக்குதலில் நமது ராணுவத்தினர் அளித்த பதிலடியையும் குறை கூறினார்கள்.

தற்போதுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சாதனைகளைச் செய்துவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியின் மீதும், பிரதமர் மோடியின் மீதும் அவதூறு பரப்புவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் முடிவுகளையும், அரசின் கொள்கைகளையும் உலகமே போற்றுகிறது.

ஆனால், இந்த நாட்டைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் தேவையில்லாத விமர்சனங்களை வைப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற நடத்தைக்குப் பின்புலம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. எப்போதுமே குறைகூற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கலாம். தங்களின் கடமையிலிருந்து தவறுவதற்கு முயல்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்று நடத்த ஜனநாயகத்தின் நலனுக்கு உகந்தது அல்ல.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையை முடக்குகின்றன. இதுபோன்று எதிர்க்கட்சிகள் நடந்துகொண்டு நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் செய்வது வேதனையாக இருக்கிறது, ஜனநாயகத்தின் துயரமாகும். எந்த இடத்திலும் நல்லவை, கெட்டவை இருக்கத்தான் செய்யும். ஆனால், பொறுப்பற்ற முறையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது ஜனநாயகத்தின் நலனுக்கு உகந்தது அல்ல.

அசாம், மிசோரம் எல்லைப் பிரச்சினையை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. விரைவில் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும். இந்த நேரத்தில் கருத்து தெரிவிப்பது உகந்தது அல்ல. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது''.

இவ்வாறு அஜய் பாட் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x