Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப் போகும் முதல் இந்திய பிரதமர் மோடி: முன்னாள் இந்திய தூதர் அக்பருதீன் தகவல்

ஹைதராபாத்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) கூட்டத்துக்கு தலைமை வகிக்கப் போகும் முதல்இந்திய பிரதமர் என்ற பெருமையைநரேந்திர மோடி பெறவுள்ளார் என்று ஐ.நா. சபைக்கான முன்னாள்இந்திய தூதர் அக்பருதீன் கூறினார்.

ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம்ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உட்பட 10 நாடுகள் தற்போது தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.

இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் இந்தியா இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.

இந்தியா தனது முதல் பணிநாளான திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2), ஐ.நா.வுக்கான இந்திய தூதர்டி.எஸ்.திருமூர்த்தி, செய்தியாளர்களை சந்தித்து பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாத திட்டம் குறித்து விளக்கவுள்ளார்.

பிரான்ஸுக்கு நன்றி

இந்நிலையில், ஜூலை மாதம்பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமைதாங்கி சிறப்பாக வழிநடத்தியதற்காகவும், இந்தியாவுக்கு ஆதரவு அளித்ததற்காகவும் பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று இந்திய தூதர் திருமூர்த்தி நன்றி தெரிவித்தார்.

முன்னதாக அவர் கூறும்போது, “ஆகஸ்ட் மாதத்தில் தலைவர் பதவியில் இருக்கும் காலத்தில்3 உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். கடலோர பாதுகாப்பு, அமைதி நடவடிக்கை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சர்வதேச அமைதியை வலுப்படுத்துவதற்கு பங்களிப்பு அளிக்கும் வகையில், தலைமை பதவியில் இந்தியா செயல்படும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப் போகும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறவுள்ளார் என்று ஐ.நா.சபைக்கான முன்னாள் இந்தியத் தூதர் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “யுஎன்எஸ்சி கூட்டத்துக்கு தலைமை வகிக்கப் போகும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெறவுள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பல்வேறு உயர்நிலைக் கூட்டங்களில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் ஷிருங்லா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இந்த அனைத்துக் கூட்டங்களும் காணொலி முறையில் நடைபெறும்” என்றார்.

இதனிடையே மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றுமுன்தினம் வெளியிட்ட ட்விட்டர்பதிவில், ‘ஆகஸ்ட் மாதத்துக்கான தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டநாம், மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவதில் ஆர்வமாக உள்ளோம். எப்போதும், மிதவாதிகளின் குரலாகவும், சர்வதேச சட்டங்களின் ஆதரவாளராகவும், பேச்சுவார்த்தையை ஆதரிக்கும் நாடாகவும் இந்தியா இருக்கும்’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x