

எல்லை பிரச்சினை தொடர்பாக அசாம் முதல்வருடன் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளதாக மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களான அசாமும், மிசோரமும் சுமார் 155 கி.மீ. எல்லையை பகிர்ந்துகொள்கின்றன. இரு மாநிலங்கள் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினையை தீர்க்க இரு மாநிலங்களும் கடந்த 1994 முதல் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தின. இருப்பினும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
அசாமில் தற்போது பாஜகவும் மிசோரமில் அதன் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை 26-ம் தேதி மிசோரம் மாநில நிர்வாகம் எல்லையில் 6.5 கி.மீ பகுதியை ஆக்கிரமித்ததாக அசாமின் சச்சார் மாவட்ட அதிகாரிகள் எல்லைக்கு வந்தனர். இதற்கு மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்ட அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இரு மாநில மக்களும் போலீஸாரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. இதில் அசாம் மாநிலபோலீஸார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இரு மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தப் பிரச்சினையில் இரு மாநில முதல்வர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர்.
இதனிடையே, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா மற்றும் அம்மாநில உயர் அதிகாரிகள் மீது மிசோரம் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இரு மாநிலங்களிடையே பதற்றமும் அதிகரித்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா ஆகியோருடன் மிசோரம் முதல்வர் சோரம் தங்கா தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். பின்னர், ட்விட்டரில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், ‘‘மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அசாம் முதல்வர் ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசித்தபடி அசாம் - மிசோரம் எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண ஒப்புக் கொண்டுள்ளோம். மிசோரம் மக்கள் பதற்றத்தை தணிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இரு மாநில அரசுகளிடையே புதிதாக பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக மிசோரம் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அசாம் முதல்வர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.