

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து அளிக்க உத்தரவிடுமாறு கோரும் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இதனால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்துக்கு வரவில்லை. அக்கட்சி தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வேண்டும் என்று விரும்பினால் அக்கட்சியே நீதிமன்றத்தை அணுகலாம்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 44 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்களை (55) கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்து அக்கட்சிக்கு அந்த அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனை காங்கிரஸ் அணுகியது. அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்டறிந்த மகாஜன், காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தார்.
கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவராக உள்ளார்.