

பாட்னா: பிஹாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிஹாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில் வழிபட ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடியிருந்தபோது, இன்று காலை 6.45 மணியளவில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் பக்தர்களிடையே பீதி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த பலர் சிகிச்சைக்காக லக்கிசராய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து லக்கிசராய் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர குமார் கூறும்போது, “அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தின் அழுத்தத்தால் தடுப்பு வேலிகளின் ஒரு பகுதி உடைந்ததால், பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” என்றார்.
உயிரிழந்த 7 பேரில் ஹேமலதா தேவி, லலிதா தேவி, ரிங்கு தேவி மற்றும் மன்மாலா தேவி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற மூவரையும் அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் ம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிஹார் முதல்வர் சம்ராட் சவுத்ரி, ‘இந்தச் சம்பவம் மிகவும் துயரமானதுதும், மனதை உலுக்கக் கூடியதுமாகும். இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குச் சரியான மற்றும் உடனடி சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
அசோக் தாம் கோயிலில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, சிராவண் மாதத்தின்போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் உயிரிழந்தார்; சுமார் 15 பேர் காயமடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.