முத்தலாக் சட்டம்; முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் தான்  உரிமை தினமா? - மத்திய அரசுக்கு ஒவைசி சரமாரி கேள்வி

முத்தலாக் சட்டம்; முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் தான்  உரிமை தினமா? - மத்திய அரசுக்கு ஒவைசி சரமாரி கேள்வி
Updated on
1 min read

இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவத்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளார்.

முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் இன்று இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக ஆகஸ்ட் 1, 2019 அன்று அரசு சட்டம் இயற்றியதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு முத்தலாக் வழக்குகள் கணிசமாக குறைந்திருப்பதாக நக்வி தெரிவித்தார். ‘‘நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பெண்கள் இந்தச் சட்டத்தை வரவேற்றுள்ளனர். இஸ்லாமிய பெண்கள் உரிமை தினத்தை நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் கடைபிடிக்கும். முத்தலாக் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், நாட்டில் உள்ள இஸ்லாமிய பெண்களின் தற்சார்பு, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை அரசு வலுப்படுத்தியிருப்பதுடன், அவர்களது அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

இந்த தினத்தை முன்னிட்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோருடன் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு நக்வி பங்கேற்றார்.

இந்தநிலையில் இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுவதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் எதிர்ப்பு தெரிவத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:

முத்தலாக் சட்டம் சட்டவிரோதமானது. இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இது சமத்துவத்திற்கு எதிரானது. முஸ்லிம்களை அச்சுறுத்துகிறது. இந்தநிலையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதை முஸ்லிம் பெண்கள் உரிமை நாளாக கொண்டாடுவதை எப்படி ஏற்க முடியும். முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் தான் உரிமை நாள் கொண்டாட்டமாக, பிறப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இந்து பெண்களின் உரிமை தினம் கிடையாதா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in