முஸ்லிம் பெண்கள் உரிமை நாளாக ஆகஸ்ட் 1ம்தேதி அனுசரிப்பு: முத்தலாக் தடை சட்டத்தின் 2-வது ஆண்டு தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read


முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் முத்தலாக் முறையை ஒழிக்க மத்திய அரசால் இயற்றப்பட்ட முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 2- ஆண்டுகள் நிறைவடைகிறது . இதனால் ஆகஸ்ட் 1ம்தேதியை முஸ்லிம் பெண்கள் உரிமை நாளாக நாடுமுழுவதும் கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் திருமணமான பெண்களிடம் மூன்றுமுறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறை நடைமுறையில் இருந்துவந்தது. இதை சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், எந்த மாற்றமும் நிகழவில்லை, சிறு காரணங்களுக்காக வாட்ஸ்அப், தொலைப்பேசி மூலம் முத்தலாக் சொல்வது தொடர்ந்து வந்தது.

இதையடுத்து, முத்தலாக் கூறி பெண்களை விவகாரத்து செய்யும் முறையை தடை செய்து, முத்தலாக்தடை சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இயற்றியது. இந்த சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன்படி முத்தலாக் கூறி முஸ்லிம் பெண்களை விவாகரித்து செய்யும் ஆண்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த சட்டம் இயற்றப்பட்டு இன்று 3-வது ஆண்டு இன்று தொடங்குகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் 1-ம் தேதியை முஸ்லிம் பெண்கள் உரிமைநாளாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில் “ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம்தேதி முத்தலாக் தடைச்சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்த சட்டம் இயற்றப்பட்டபின் முஸ்லிம் சமூகத்தில் முத்தலாக் கூறி பெண்களை சிறுமைப்படுத்துவது, அதுதொடர்பான வழக்குகள் குறைந்துவிட்டன. நாடுமுழுவதும் உள்ள முஸ்லிம் பெண்களில் பெரும்பாலானோர் இந்தச் சட்டத்துக்கு வரவேற்பு அளிக்கிறார்கள்.

ஆதலால், ஆகஸ்ட்1ம் தேதியை முஸ்லிம் பெண்கள் உரிமை நாளாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள முஸ்லிம் பெண்களின் சுயச்சார்பு, சுயமரியாதை, தன்னம்பிக்கையை மத்திய அரசு முத்தலாக் தடைச்சட்டத்தின் மூலம் வலுப்படுத்தியுள்ளது. அவர்களின் ஜனநாயக உரிமையை , அரசியலமைப்புச் சட்ட உரிமையை, அடிப்படை உரிமையை முத்தலாக் தடைச் சட்டத்தின் மூலம்அரசு பாதுகாத்துள்ளது “ எனத் தெரிவித்தார்.

டெல்லியில் முத்தலாக் தடைச் சட்டத்தின் 3-வது ஆண்டையொட்டி இன்று நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஸ்மிருதி இரானி, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துரை அமைச்சர் பூபேந்திர யாதவ், ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in