

கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங் களில் கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகி விடும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா முதல் அலை கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்தது. அதன் பின்னர், தினசரி கரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த சூழலில், கடந்த பிப்ரவரி இரண்டாம் வாரம் முதலாக வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்தது. இது, பெருந்தொற்றின் இரண்டாம் அலை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். முதல் அலையை ஒப்பிடுகையில், இரண்டாம் அலையின் வீரியம் சற்று அதிகமாகவே இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் வைரஸால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்தது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த மே முதல் வாரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான தினசரி பாதிப்பு பதிவானது. உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்தது.
இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் கரோனா பரவல் படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் வந்ததை காண முடிந்தது. குறிப்பாக, ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தினசரி பாதிப்புகணிசமாக குறையத் தொடங்கியது. பல நாட்களாக தொடர்ந்து 40 ஆயிரத்துக்கு கீழ் தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. இதன் காரணமாக, கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததாகவே மக்கள் கருதினர்.
3-ம் அலையின் தொடக்கம்
இந்த சூழலில், கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக கரோனாவைரஸால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. சில தினங்களாக 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் பெருந்தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இது, கரோனா மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரா ஆகிய 10 மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
46 மாவட்டங்களில்...
குறிப்பாக, இந்த மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக தொற்று பாதிப்பு (பாஸிட்டிவிட்டி ரேட்) இருக்கிறது. 53 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 5 முதல் 10 சதவீதத்துக்குள் இருக்கிறது. இது மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இந்த மாவட்டங்களில் வைரஸ் பரவுவதை தடுக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு அலட்சியம் காட்டினால் கூட, நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.