

இரு வேறு வழக்குகள் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
முதல் வழக்கு, ஜம்மு பஸ்நிலையம் அருகே கடந்த பிப்ரவரியில் 7 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பானது ஆகும். 2-வது வழக்கு, லஷ்கர்-இ-முஸ்தபா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹிதாயதுல்லா மாலிக் கைது செய்யப்பட்ட பிறகு வெளியான சதித் திட்டம் தொடர்பானது ஆகும்.
ஜம்முவில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி, அனந்தநாக் போலீஸாரால் ஹிதாயதுல்லா மாலிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஜம்முவில் தனது அமைப்புக்கு ஓர் அமைப்பிடம் ஏற்படுத்த முயன்றதும் தீவிரவாத தாக்குதல்களுக்கு அவர் திட்ட மிட்டு வந்ததும் தெரியவந்தது. தாக்குதலுக்காக டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அலுவலகம் படம் பிடிக்கப்பட்டதையும் அவர்ஒப்புக்கொண்டார்.
ஜம்மு மற்றும் டெல்லியில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளை அவர் உளவு பார்த்துள்ளார். மாலிக் கடந்த காலங்களில் பிற தீவிரவாத குழுக்களில் இடம்பெற்று காஷ்மீர் பள்ளத் தாக்கில் தீவிரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட சதிச் செயல்களை அரங்கேறியுள்ளார்.
இவரது வழக்கை மார்ச் 2-ம் தேதி என்ஐஏ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உத்தரவின் பேரில் லஷ்கர்-இ-முஸ்தபா அமைப்பு செயல்பட்டு வந்ததாக அப்போது என்ஐஏ கூறியது. இந்நிலையில் நேற்று ஜம்மு - காஷ்மீரின் ஸோபியான் உள்ளிட்ட 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.