Last Updated : 01 Aug, 2021 06:29 AM

 

Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

ரூ.7 லட்சம் வெகுமதி அறிவிப்புடன் 5 மாநில போலீஸாரால் தேடப்பட்ட கூலிப்படை தலைவனை கைது செய்து டெல்லி காவல்துறை சாதனை

காலா ஜதேடி

புதுடெல்லி

ஹரியாணா மாநிலத்தின் சோனிபத் மாவட்டம், ஜதேடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் காலா ஜதேடி என்கிற சந்தீப் சவுத்ரி. அப்பகுதியில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்த இவர் கடந்த 2009-ல் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்குச் சென்றார்.

ஜாமீனில் வெளியே வந்த இவர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மாநிலங்களில் ஆட்கடத்தலில் இறங்கினார். பிறகு லாரன்ஸ் பிஷ்னோய் என்பவருடன் இணைந்த இவர், நிழல் உலக தாதாக்களை மிஞ்சும் வகையில் ஒரு கூலிப்படையை அமைத்தார். பணத்துக்காக முக்கிய நபர்களை கடத்துதல், கொலை செய்தல் என குற்றங்களில் ஈடுபடத் தொடங்கினார். ஏ.கே-47 உள் ளிட்ட நவீன ரக துப்பாக்கிகளுடன் செயல்பட்டு வந்த இவரது கூலிப்படையில் தற்போது 200-க்கும் அதிகமானோர் பல்வேறு மாநிலங்களில் உள்ளதாகத் தெரிகிறது.

2 முறை சிறையிலும் இருந்த இவர், அங்கிருந்தபடி தனது கும்பலை வழி நடத்தினார். வெளிநாடுகளில் இருந்தும் காலா ஜதேடிக்கு ஆட்களை கடத்தவும் கொல்லவும் உத்தரவுகள் வருவது உண்டு. தாய்லாந்து, நேபாளம் மற்றும் துபாயிலும் காலா சில மாதங்கள் தலைமறைவாக வாழ்ந்தார்.

இந்நிலையில் சகவீரர் கொலை வழக்கில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில்குமாரிடம் விசாரணை நடந்தபோது, காலாவுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுஷில் மூலமாக காலாவை பொறி வைத்துப் பிடிக்க டெல்லிபோலீஸார் தனிப்படை அமைத்தனர்.

இந்நிலையில் தனிப்படை போலீஸாரால் உ.பி.யின் சஹரான்பூரில் காலா ஜதேடி கைது செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் காலாவின் காதலியான ‘லேடி டான்’ அனுராதா சவுத்ரியும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

காலாவின் நண்பரான லாரன்ஸ்பிஷ்னோய் பணியாற்றிய அனந்தபால் கும்பலில் அனுராதாவும் ஒருவர். இவர் கும்பலின் தலைவன் அனந்தபாலுடன் இணைந்து வாழ்ந்தவர். ஆட்களைகடத்த திட்டமிடுவதிலும் அனைத்துவகை வாகனங்களை ஓட்டுவதிலும் திறமை மிக்கவர்.

கடந்த 2017-ல் டெல்லி போலீஸாரின் என்கவுன்ட்டரில் அனந்தபால் உயிரிழந்தார். இதனால் லாரன்ஸ் மூலமாக காலா கும்பலில் இணைந்த அனுராதா, காலாவின் காதலியாக வாழ்ந்து வந்தார். கொலை மற்றும் ஆட்கடத்தலில் இவர் 'லேடி டான்' என்று அழைக்கப்பட்டார். இவரது தலைக்கு ரூ.25,000 பரிசு அறிவித்து 5 மாநில போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் ‘லேடி டான்’ அனுராதாவும் தற்போது சிக்கியுள்ளார். காலாவின் மீது 26 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த இருவரின் கைதும் டெல்லி போலீஸாரின் சாதனையாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x