காவல்துறை மீதான தவறான பிம்பம் மாற்றப்பட வேண்டும்: ஐபிஎஸ் பயிற்சியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

காவல்துறை மீதான தவறான பிம்பம் மாற்றப்பட வேண்டும்: ஐபிஎஸ் பயிற்சியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை
Updated on
1 min read

காவல்துறை மீதான தவறான பிம்பம் மாற்றப்பட வேண்டும் என ஐபிஎஸ் பயிற்சியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

காவல்துறை செயல்பாடு என்பது எப்போதும் தேசிய நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். உங்களைப் போன்ற இளம் அதிகாரிகள் காவல்துறை மீதான பார்வையை நேர்மறையாக மாற்ற முனைப்புடன் செயல்பட வேண்டும்.

களத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு தேசிய நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். உங்கள் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட உள்ளூர் வரம்புடன் முடிவதாகவும் இருக்கலாம், ஆனால் நீங்கள் ('ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்’) 'ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின் அடையாளமாகத் திகழ்பவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோன்றதொரு நம்பிக்கையும் மரியாதையும் ஏன் காவல்துறை மீது வருவதில்லை? பேரிடர் காலங்களில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்துவிட்டால் தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்று மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. என்டிஆர்எஃப்பில் நிறைய காவல்துறையினர் உள்ளனர். ஆனால் காவல்துறைக்கு என்டிஆர்எஃப்புக்கு நிகராக ஏன் மரியாதை இருப்பதில்லை.

கரோனா பெருந்தொற்றூக்குப் பின்னர் போலீஸ் மீதான பார்வை சற்று மாறியுள்ளது. காவல்துறையின் மீது மக்களின் நம்பிக்கை ஏன் அதிகரிப்பதில்லை என்பது உங்களுக்குத் தான் தெரியும். உங்களைப் போன்ற இளம் அதிகாரிகள் அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும். நீங்கள் சிஸ்டத்தை மாற்றுகிறீர்களா, இல்லை சிஸ்டம் உங்களை மாற்றுகிறதா என்பது உங்களின் பயிற்சியைப் பொறுத்து அமையும்.
காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையாலும், பொறுப்புமிகுதியாலும் பெண்கள் காவல்துறையில் கனிவு, உணர்திறன் போன்றவற்றை அதிகரிக்கின்றனர்.

நவீன காலத்தில் சைபர் குற்றங்கள் மிகுந்து வருவதால் காவல்துறையினர் சைபர் குற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in