Published : 31 Jul 2021 02:00 PM
Last Updated : 31 Jul 2021 02:00 PM

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி; வேகப்படுத்த வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

புதுடெல்லி

குழந்தைகளுக்கான கரோனா தடுப்பு மருந்து உருவாக்குவதை துரிதப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

ஹைதராபாத்தின் ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் லிமிடெட் நிறுவன ஆலையை பார்வையிட்ட பின்னர் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது:

கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை நாடு தழுவிய மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்றும், நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க இதை விட சக்தி வாய்ந்த வழி வேறெதுவும் இல்லை. தடுப்பு மருந்து தயக்கத்திற்கு இடமில்லை.

குழந்தைகளுக்கான கரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்த வேண்டும். வைரஸிடம் இருந்து குழந்தைகளை காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

கோவிட்-19 பாதிப்புகள் தற்காலிகமாக குறைந்திருப்பதால் அஜாக்கிரதையுடன் மக்கள் இருக்கக் கூடாது. கோவிட் விதிமுறைகளை மீறாமல் பொறுப்புள்ள மக்களாக நாம் நடந்து கொள்வோம். மக்கள் முகக் கவசங்களை அணிவதுடன் தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சரியான கோவிட் நடத்தை விதிமுறையை பின்பற்ற வேண்டும். பொறுப்புடன் நடந்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மூன்றாவது அலையை நாம் வரவேற்கக் கூடாது.

உலகத்தின் மருந்தகம் எனும் சர்வதேச பாராட்டை இந்தியா பெற்றிருக்கிறது. 50 சதவீத தடுப்புமருந்தை இந்தியா விநியோகிக்கிறது. பொது மருந்துகளின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருக்கிறது. எய்ட்ஸை கட்டுப்படுத்தும் மருந்துகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இந்திய மருந்து நிறுவனங்கள் விநியோகிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹமூத் அலி, பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கிருஷ்ணா யெல்லா, இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா யெல்லா, முழு நேர இயக்குநர் டாக்டர் கிருஷ்ண மோகன் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x