

ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை இனிமேல் டெல்லிக்கு வருவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தை முடித்துவிட்டுச் செல்லும்போது மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக முதல்வரானபின் முதல் முறையாக டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். டெல்லியில் 5 நாட்கள் பயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசினார்.
5 நாட்கள் பயணம் முடித்து முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு கொல்கத்தாவுக்குப் புறப்பட்டார். அப்போது திரிணமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி இல்லத்தில் மம்தா பானர்ஜி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''என்னுடைய பயணம் வெற்றிகரமாக அமைந்தது. அரசியல் பயணமாக வந்து என்னுடைய அரசியல் சகாக்கள் பலரையும் சந்தித்துப் பேசினேன். அரசியல் ரீதியாகப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். ஜனநாயகம் கண்டிப்பாக நீடித்திருக்க வேண்டும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும், நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இனிமேல் ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒருமுறை டெல்லி வருவேன்.
விவசாயிகள் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறேன், இது தொடர்பாக அவர்களுடன் அடிக்கடி பேசி வருகிறேன். அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்வதைவிடச் சிறந்தது வேறு ஏதும் இருக்க முடியாது. கரோனா பரவல் பிரச்சினையால் என்னால் ஒவ்வொரு தலைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியவில்லை. ஆனால், சந்திப்புகளின் முடிவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இனிமேல் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே நோக்கத்துக்காக ஒன்றுசேர்ந்வது தானாகவே நடக்கும். என்னுடைய பயணம் வெற்றிகரமாக அமைந்தது”.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த் சர்மா, கமல்நாத், அபிஷேக் சிங்வி, திமுக எம்.பி. கனிமொழி, ஆகியோரை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.