

மத்திய அரசின் 27 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பு உத்தரபிர தேசத்தைகுறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. அங்கு அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்பாஜகவுக்கு இதனால் பலன்கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனமத்திய அரசு நேற்று முன்தினம்அறிவித்தது. மேலும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மற்ற மாநிலங்களை விட அதிக மக்கள்தொகை கொண்ட உ.பி.க்கு கூடுதல் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் உ.பி.யில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட் சியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உ.பி.யில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற அனைத்து சமூகத்தினர் வாக்குகளையும் பாஜக குறி வைத்துள்ளது. இந்த அறிவிப்பால் நாடு முழுவதிலும் பாஜகவுக்கு சாதகமான பலன் கிடைக்கும். என்றாலும் இந்த அறிவிப்பின் பின்னணியில் உ.பி. தேர்தலில் ஆதாயம் தேடும் அரசியலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, “உ.பி.யில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பெரும்பாலான வாக்குகள் எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி வசம் உள்ளன. இந்த இடஒதுக்கீடு அறிவிப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இளைய சமுதாயம் பாஜக வசம் வரும். 10 சதவீத ஒதுக்கீட்டால் பிராமணர்கள் பலன் பெறுவதால் உ.பி.யில் அதிக சதவீதம் உள்ள அவர்களின் வாக்குகளும் எங்க ளுக்கு கிடைக்கும். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் உ.பி.யில் பாஜகவுக்கு நேரடிப் பலன் கிடைக்கும்” என்று தெரிவித்தன.
மற்ற மாநிலங்களை விட உ.பி.யில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், உயர் வகுப்பினர் ஆகிய மூன்றுபிரிவினரும் கணிசமான சதவீதத்தில் உள்ளனர். மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என இங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் நீண்ட நாட்களாககோரி வந்தனர். இதை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் எச்சரித்திருந்தனர்.