

சிபிஎஸ்இ தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி இன்னும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றிருக்கலாம் என நினைப்பவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்களை இளம் நண்பர்களே என கூறிய பிரதமர் அவர்களின் பிரகாசமான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
‘‘சிபிஎஸ்இ தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற எனது இளம் நண்பர்களுக்கு வாழ்த்துகள். பிரகாசமான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்னும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றிருக்கலாம் என நினைப்பவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் - உங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், தலை நிமிர்ந்து நில்லுங்கள். பிரகாசமான மற்றும் வாய்ப்பு நிறைந்த எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் திறமையை உள்ளடக்கியவர்கள். உங்களுக்கு எப்போதும் என் வாழ்த்துகள்.
இந்தாண்டு 12ம் வகுப்பு மாணவர்கள், இதற்கு முன் ஏற்படாத சூழல்களை சந்தித்தனர்.
கல்வி உலகம், கடந்தாண்டு பல மாற்றங்களை கண்டது. ஆயினும், அவர்கள் புதிய இயல்பை பின்பற்றி, தங்களின் சிறந்த திறனை அளித்தனர். அவர்களால் பெருமிதம்’’
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.