Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

ஜார்க்கண்ட்டில் அதிகாலை நடைபயிற்சி சென்றபோது ஆட்டோ ஏற்றி மாவட்ட நீதிபதி கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்துக்கு உச்ச நீதிமன்றமும், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக இருந் தவர் உத்தம் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் நடைபயிற்சி சென்றுள்ளார். வீட்டில் இருந்து அரை கி.மீட்டர் தொலைவில் சாலையில் மெதுவாக ஓடிக் கொண் டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து சாலையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

அந்த வழியாக சென்ற ஒருவர், நீதிபதியை மீ்ட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பல னின்றி நீதிபதி உத்தம் ஆனந்த் பரிதாப மாக உயிரிழந்தார். மர்ம வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளி யானது. அதில், நீதிபதி உத்தம் ஆனந்த் நடை பயிற்சி செல்வதும், ஒரு திருப்பத்தில் இருந்து ஆட்டோ ஒன்று வேக மாக திரும்பி அவர் மீது மோதி விட்டு நிற்காமல் செல்வதும் அந்த காட்சியில் பதிவாகி உள்ளது. வேறு எந்த வாகனங்களும் இல்லாமல் வெறிச் சோடிய சாலையின் ஓரமாக சென்று கொண்டிருந்த நீதிபதி மீது வேண்டுமென்றே ஆட்டோ மோதுவது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி, ஆட்டோ ஓட்டுநர் லக்கன் குமார் வர்மா, அவரது கூட்டாளி ராகுல் வர்மா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து ஐ.ஜி. அமோல் வினு கந்த் ஹாம்கர் நேற்று கூறியதாவது:

நீதிபதி மீது வேண்டுமென்றே ஆட் டோவை ஏற்றி கொலை செய்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவருகிறது. இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் ஆட்டோவை திருடிச் சென்று கொலைக்கு பயன் படுத்தி உள்ளனர். அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொலை செய்யப்பட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், தன்பாத் நகரில் மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரித்து வந்துள்ளார். சமீபத்தில் மாபியா கும்பலைச் சேர்ந்த 2 பேருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளார். அதனால், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மாவட்ட நீதிபதி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி ரஞ்சன் அதிர்ச்சி அடைந்துள்ளார். விபத்து வழக்கை மாற்றி கொலை வழக்காக எப்ஐஆர் பதிவு செய்ய போலீஸார் தாமதப்படுத்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் போலீஸார் வேண்டுமென்றே கால தாமதம் செய்தது தெரியவந்தால், உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவேன் என்று போலீஸாருக்கு தலைமை நீதிபதி ரவி ரஞ்சன் எச்சரித்தார்.

நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் பிரதிநிதிகள் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறும்போது, ‘‘நீதிபதி கொலை தொடர்பாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேசினேன். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாங்களும் இந்த வழக்கை கவனித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்று கூறினார்.

மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், நீதித்துறையில் உள்ளவர் களை மிரட்டும் நோக்கிலும் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.-பிடிஐ

திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ?

இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் வழக்கறிஞர் விகாஸ் சிங் கொண்டு சென்றார். அப்போது விகாஸ் சிங் கூறியதாவது:

இது நீதித்துறை மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் உள்ளூர் போலீஸாரும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மாபியா கும்பலைச் சேர்ந்தவர்களின் ஜாமீன் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி, காலை நடைபயிற்சியின்போது கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு விகாஸ் சிங் கூறினார்.

இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்தார். அப்போது, ‘‘மாவட்ட நீதிபதி மீது வாகனம் மோதுவதை வீடியோ எடுத்தது யார்’’ என்று நீதிபதி எம்.ஆர்.ஷா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘‘இது சாதாரணமாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்போல் தெரியவில்லை. இதை வெளியில் பரப்புவதற்காகவே திட்டமிட்டு கொலை சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது. இது வெட்கக்கேடானது. இது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அல்ல. இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தபோது சிலருடைய குரல்களை கேட்க முடிகிறது’’ என்று சந்தேகம் எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x