Last Updated : 30 Jul, 2021 03:14 AM

 

Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

அமைச்சர் பதவியை கைப்பற்ற கர்நாடகாவில் கடும் போட்டி: முதல்வர் பசவராஜ் ஆலோசனை

பெங்களூரு

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் பதவியேற்றார். அவருடன் 3 துணை முதல்வர்கள் பதவியேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மூத்த எம்எல்ஏக்கள் இடையே ஏற்பட்ட கடும் போட்டி காரணமாக துணை முதல்வர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதுபோல் அமைச்சர் பதவிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் அமைச்சரவை பட்டியல் தயாரிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

லிங்காயத்து வகுப்பை சேர்ந்த பசவராஜ் பொம்மைக்கு முதல்வர் பதவி வழங்கியுள்ளதால் பட்டியல் வகுப்பினர், ஒக்கலிகா, குருபாஉள்ளிட்ட சாதியினர் துணை முதல்வர் பதவி கோரி போர்க்கொடி தூக்கியுள்ளனர். மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என குருபா சங்கங்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இன்னொரு பக்கம் மூத்த எம்எல்ஏக்களான முருகேஷ் நிரானி, சி.பி.யோகேஷ்வர், அரவிந்த் பெல்லத் உள்ளிட்ட30-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதனிடையே கடந்த 2019-ல்காங்கிரஸ், மஜதவில் இருந்து பாஜகவுக்கு தாவிய 17 எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கோரி போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வர்மாற்றத்தால் பதவியை இழந்துள்ள அவர்கள், எம்.டி.பி.நாகராஜ் தலைமையில் எடியூரப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது கட்சி மாறிய சமயத்தில் தங்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி சென்று மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மூன்று நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x