Published : 29 Jul 2021 08:21 PM
Last Updated : 29 Jul 2021 08:21 PM

சென்னை மெட்ரோ ரயில் 2; 118.9 கிலோமீட்டர்  விரிவாக்கத் திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி

சென்னை மெட்ரோ ரயில் 2-வது திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியதாவது:

நகர்ப்புற வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் நகர்ப்புற போக்குவரத்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்ட போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு மாநிலங்களே பொறுப்பு. ஆனால், மாநிலங்களிடம் இருந்து கோரிக்கை வரும் நிலையில், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி உள்ளிட்டவற்றை மத்திய அரசு செய்கிறது.

நாட்டின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை மெட்ரோ ரயில் 2-வது திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டன. மாநில அரசுத்துறை திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது. 118.9 கிலோமீட்டருக்கு இது செயல்படுத்தப்படும்.

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் (நகர்ப்புறம்) 41,75,214 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 20,39,571 வீடுகள் நகர்ப்புற ஏழைகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை மொத்தம் 6,71,195 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 3,98,407 வீடுகள் நிறைவு செய்யப்பட்டு விட்டன/பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில், போளூரில் 322 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 146 வீடுகள் நிறைவு செய்யப்பட்டு விட்டன/பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.

ஆரணியில் 1,100 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 854 வீடுகள் நிறைவு செய்யப்பட்டு விட்டன/பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.

வந்தவாசியில் 279 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 243 வீடுகள் நிறைவு செய்யப்பட்டு விட்டன/பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.

செஞ்சியில் 479 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 219 வீடுகள் நிறைவு செய்யப்பட்டு விட்டன/பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.

பிரதமரின் சுவநிதி திட்டத்தின் கீழ் ரூ 2,243 கோடி மதிப்பிலான 22.7 லட்சம் கடன்கள் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

2020 ஜூன் 1 முதல் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், ரூ 10,000 வரையிலான கடன் ஒரு வருடத்திற்குள் திருப்பி செலுத்தும் வசதியுடன் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

அவர்கள் இதை முறையாக திரும்ப செலுத்தியவுடன், ரூ 20,000 மற்றும் ரூ 50,000 வரையிலான கடன்களுக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

நகர்ப்புறங்களில் வாழும் நிலைமைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நகர்ப்புற மேம்பாடு என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வரும் போதிலும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் முன்னணி திட்டங்களான அம்ருத், பொலிவுறு நகரங்கள் திட்டம், பிரதமரின் வீட்டுவசதி திட்டம் (நகர்ப்புறம்), தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ் குறைந்த வாடகையிலான வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 88,236 அரசு நிதியுதவி பெற்ற காலி வீடுகள் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்த வாடகையிலான வீடுகளாக மாற்றப்பட தயாராக இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x