45 கோடி கோவிட் தடுப்பூசிகள்; இந்தியா புதிய சாதனை: சுகாதார அமைச்சகம் பெருமிதம்

45 கோடி கோவிட் தடுப்பூசிகள்; இந்தியா புதிய சாதனை: சுகாதார அமைச்சகம் பெருமிதம்
Updated on
1 min read

நாடு முழுவதும் 45 கோடி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை, மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக கோவிட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 45 கோடி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் இதுவரை போடப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 45 கோடியைக் கடந்தது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், 54,11,501 முகாம்கள் மூலம் மொத்தம் 45,07,06,257 தடுப்பூசி டோஸ்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 43 லட்சத்துக்கும் அதிமான கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.

பெருந்தொற்று துவங்கிய காலம் முதல் இதுவரை 3,07,01,612 பேர் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,465 பேர் குணமாகி உள்ளனர். ஒட்டு மொத்த குணமடையும் விகிதம் 97.38 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,509 அன்றாட புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து 32-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது. நம் நாட்டில் கோவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,03,840 ஆக உள்ளது. இது நாட்டில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 1.28 சதவீதமாகும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in